ஜனா என்னும் நேர்மையாளர்!

இப்போதுள்ள இளைஞர் சமுதாயத்திற்கு ஜனா கிருஷ்ணமூர்த்தியைத் தெரியுமா என கேட்டால் நிச்சயம் 90 சதவீதத்துக்கும் மேல் தெரியாது என்றுதான் சொல்வார்கள். மதுரையில் பிறந்தவர். சட்டப்படிப்பு முடித்து மதுரையில் வக்கீலாக பணியாற்றியவர். பிறகு ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்தார். பாரதிய ஜனதா கட்சியை தொடங்கியவர்களில் இவரும் ஒருவர். எந்தவித ஆரம்பரத்தையும் விரும்பாதவர். இவருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

ஆட்சி அமைக்க அழைப்பு

1996 மே மாதம் நடைபெற்ற பார்லி தேர்தலில் பாஜவின் பிரதமர் வேட்பாளரான அடல் பிஹாரி வாஜ்பாய் தீவிரமாக பிரசாரம் செய்தார். பாஜ 161 தொகுதிகளில் வெற்றது. காங்கிரஸ் -140 இடம் பெற்றது. மீதமுள்ள இடங்களை பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிகள் உட்பட பல மாநில கட்சிகள் கைப்பற்றின. பாஜ ஆட்சி அமைக்க 272 சீட் தேவை. இருப்பது 161 மட்டுமே. இப்போது முழு மெஜாரிட்டி இருக்கிறது என்பதை கடிதம் மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பினால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு வரும்.

தனி மெஜாரிட்டி யாருக்கும் இல்லாத நிலையில், யார் தனிப்பெரும் கட்சியாக உள்ளார்களோ அந்த கட்சிக்கு முதலில் அழைப்பு வரும். இந்த வழக்கத்தின்படி அப்போதைய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, அரசு அமைக்குமாறு வாஜ்பாயை அழைத்தார். இது அரசியல் வட்டாரங்களில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சிவசேனா, அகாலி தளம் மற்றும் ஜார்ஜ் பெர்ணாண்டஸின் சமதா கட்சி எம்பிக்கள் வாஜ்பாய்க்கு ஆதரவு அளித்தும் அது போதுமானதாக இல்லை.

பிரதமராக பதவியேற்றார் வாஜ்பாய்

இதைப் பற்றி கவலைப்படாமல் மே 16, 1996ல் பிரதமராக பதவியேற்றார் வாஜ்பாய். இவருடன் முரளி மனோகர் ஜோஷி, சிக்கந்தர் பக்த், சுஷ்மா ஸ்வராஜ், பிரமோத் மகாஜன், ஜஸ்வந்த் சிங் உட்பட 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மே மாதம் 28ம் தேதி லோக்சபாவில் பெரும்பான்மையை அதாவது பாஜகவிற்கு மெஜாரிட்டி உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும். அனைவருக்குமே ஆச்சர்யம். எப்படி இவருக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சில மாநில கட்சிகள் எப்படியும் தனக்கு உதவும் என நம்பினார் வாஜ்பாய். தனக்கு உதவி செய்யும் என நினைத்த கட்சிகளுடன் ஒரு பக்கம் பேச்சு நடைபெற்றது. சிலருக்கு அமைச்சர் பதவிகளும் தரப்படும், ஆதரவு தாருங்கள் என பல பக்கமும் தனக்கு நெருக்கமான ஆட்களை அனுப்பினார் வாஜ்பாய். இந்த சமயத்தில் பாஜவின் துணை தேசிய தலைவராக இருந்தார் ஜனா கிருஷ்ணமூர்த்தி.Image 1544696

சந்திப்பு

அப்போது பாஜ தலைமை அலுவலகம் டில்லியில் அசோக் சாலையில் 5ம் எண்ணுள்ள பங்களாவில் இருந்தது. இப்போது இருப்பதைப் போல அதிக செக்யூரிட்டியும் அப்போது கிடையாது. சுலபமாக அலுவலகத்திற்கு உள்ளே சென்று யாரையும் சந்திக்கலாம். சீனியர் பத்திரிகையாளர் ஒருவரும் நானும் பாஜ அலுவலகத்தில் நுழைந்தோம்.

ஜனா தமிழராயிற்றே, அவரை சந்திக்கலாம் என நினைத்து அவரின் செயலரிடம், ‘ஜனாவை சந்திக்க முடியுமா’ என கேட்டோம். எங்கள் பெயர் மற்ற விவரங்களைக் கேட்டுக் கொண்டு உள்ளே சென்றவர் உடனே திரும்பி வந்தார். “ஐந்து நிமிடங்கள் காத்திருங்கள்…உங்களை சந்திப்பார்” என்றார், செயலர். சிறிது நேரத்திற்கு பிறகு ஜனாவின் அறைக்குள் சென்றோம்.

கோபம்

வணக்கம் என சொன்னோம். வாங்க வாங்க என வணக்கத்தோடு தமிழில் வரவேற்றார். என்னோடு வந்த சீனியர் பத்திரிகையாளரை ஏற்கெனவே ஜனா அறிந்திருந்தார். நான் முதன் முறையாக அவரை சந்தித்தேன். என்னைப் பற்றி விசாரித்தார். அரசியல் நிலை குறித்து சிறிது நேரம் பேசினோம்.

வாஜ்பாய் பிரதமரானது குறித்து எங்கள் பேச்சு திரும்பியது. அப்போது நான் கேட்டேன். ”சார், உங்களுக்கு மெஜாரிட்டியே இல்லையே, அப்படியிருக்க எப்படி வாஜ்பாய் பார்லிமென்டில் பெரும்பான்மையை நிரூபிப்பார்,” என்று கேட்டேன். என் கேள்வி அவரை அதிர்ச்சி அடைய வைத்திருக்க வேண்டும். என்னை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தார்.

“ஜனாதிபதி அழைப்பை ஏற்று பிரதமராக வாஜ்பாய் பதவி ஏற்றுள்ளார் என்றால் இதையெல்லாம் யோசிக்காமலா இருந்திருப்பார்,” என்ற ஜனா குரலில் லேசான கோபம். “அதற்கில்லை. அவருக்கு எந்த ஒரு மாநில கட்சியும் ஆதரவு அளிப்பதாக தெரியவில்லையே,” என்றேன். “வாஜ்பாய்க்கு தெரியாதது உங்களுக்கு தெரியுமா,” என்ற அவரது குரலில் கோபம் கொப்பளித்தது.

இதன் பிறகு வாஜ்பாயைப் பற்றியோ அவர் ஆட்சி நீடிக்குமா என்பதைப் பற்றியோ நான் கேட்கவேயில்லை. பார்லிமென்டில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தால் மே 28ம் தேதி, அதாவது 13 நாட்கள் பிரதமராக இருந்த பிறகு ராஜினாமா செய்தார் வாஜ்பாய்.

கட்சியின் தேசிய தலைவர்

இந்த 13 நாட்கள் பிரதமராக இருந்த வாஜ்பாய் பிறகு மீண்டும் 1998ல் பிரதமரானார். அதிமுக திடீரென ஆதரவை வாபஸ் வாங்கியதால் ஆட்சி பறிபோனது. பிறகு நடந்த பார்லிமென்ட் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அக்டோபர் 1999ல் மீண்டும் பிரதமர் பதவியில் அமர்ந்தார் வாஜ்பாய்.

அந்த சமயத்தில் பாஜவின் தேசிய தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் ஒரு ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கியதால் பதவி விலகினார். உடனே ஜனா கிருஷ்ணமூர்த்தி தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார். ஓராண்டும், 3 மாதங்களும் தலைவர் பதவியில் நீடித்தார்.

உள்குத்தால் தலைவர் பதவி பறிபோனது

வாஜ்பாய்க்கு மிகவும் நெருங்கியவர் ஜனா. தினமும் ஒரு முறையாவது வாஜ்பாயிடம் பேசிவிடுவார் அல்லது சந்திப்பார். எந்த ஒரு விஷயமானாலும் வாஜ்பாயிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுத்தான் முடிவெடுப்பார். இது கட்சியில் இருந்த எதிர் கோஷ்டிக்கு பிடிக்கவில்லை.

காங்கிரசைப் போல ஊருக்கு ஊர் பாஜகவில் கோஷ்டி இல்லையென்றாலும் மேலிடத்தில் வேண்டியவர், வேண்டாதவர் என்ற பிரச்னை இருந்தது. அத்வானி எதிர் தரப்பின் தலைவர். தன்னை குறை சொல்கிறார்கள் என்று அறிந்தவுடன், கட்சி தலைமை பதவியிலிருந்து ஜனா விலகினார். தானாக பதவி விலகிய ஜனாவுக்கு ஏதாவது முக்கிய பதவி கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார் வாஜ்பாய்.

அமைச்சர் பதவியும் சிக்கலும்

2002 ஜூலை மாதம் வாஜ்பாய் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. கட்சி தலைவராக இருந்த ஜனா சட்டத்துறை அமைச்சரானார். இவருக்கு வேறு துறை தருவதாக வாஜ்பாய் சொன்னாராம். ஆனால் தனக்கு சட்டத்துறைதான் வேண்டும் என கேட்டு வாங்கிக்கொண்டார் ஜனா. இதனால் சட்ட அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி தன் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று.

ஜேட்லிக்கு கட்சி பதவி வழங்கப்பட்டது. தன் கொள்கைகளிலிருந்து சிறிதும் பின்வாங்காதவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி. அதோடு தன் அமைச்சகத்தில் யாரும் மூக்கை நுழைக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். சட்ட அமைச்சக விவகாரத்தில் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என ஜனாவிற்கு சில கோரிக்கைகள் வந்தன.

யார் தலையீட்டையும் விரும்பாதவர் என்பதால் அந்த கோரிக்கைகளை ஜனா கண்டுகொள்ளவில்லை. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, ‘சட்ட அமைச்சகத்தை இவரால் கையாள முடியவில்லை’ என எதிர்கோஷ்டி புகார் அளித்தது. ‘வேறு அமைச்சகம் தருகிறேன்’ என வாஜ்பாய் சொன்னாலும் மறுத்துவிட்டார் ஜனா. இதையடுத்து 7 மாதம் மட்டுமே அமைச்சராக இருந்தவர், ஜூன் 2002ல் பதவியை ராஜினாமா செய்தார். அருண் ஜேட்லி மீண்டும் சட்ட அமைச்சரானார்.

அப்போது நான் என்.டி.டி.வி.,யில் இருந்தேன். எதற்கு பதவி விலகினார் என பேட்டி காண சீனியர் நிருபருடன் சென்றேன். அவர் வீட்டின் வெளியே ஏகப்பட்ட மீடியா கூட்டம். ஆனால் யாரையும் சந்திக்க மறுத்துவிட்டார். நாங்கள் மட்டும் காத்திருந்தோம். பல முறை போன் செய்த பிறகு எங்களை சந்திக்க ஒத்துக்கொண்டார். உள்ளே சென்றோம். ‘பேட்டியெல்லாம் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு எங்களுடன் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் எதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதை மட்டும் அவர் சொல்லவேயில்லை.

கடைசி சந்திப்பு

வாஜ்பாய் அமைச்சரவையில் பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானார். அவருக்கு டில்லியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. குடி புகும் முன்னர் அந்த புதிய பங்களாவில் பூஜைகள் நடத்த விரும்பி அதற்கு ஏற்பாடும் செய்தார். அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தார் பொன் ராதாகிருஷ்ணன்.

அங்கு சென்ற போது ஜனா கிருஷ்ணமூர்த்தி, சுகுமாரன் நம்பியார் ஆகியோர் இருந்தனர். ஜனாவுடன் நெடு நேரம் தமிழக அரசியல் மற்றும் தேசிய அரசியல் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். கட்சியில் இவருக்கு எதிராக இருந்தவர்களைப் பற்றியோ, ஏன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது பற்றியோ எதுவுமே பேசவில்லை அவர். இதுதான் அவருடன் என் கடைசி சந்திப்பு.

செப்டம்பர் 2007ல் சென்னையில் காலமானார் ஜனா கிருஷ்ணமூர்த்தி. நேர்மை, நாணயம் என்கிற கொள்கைகளோடு செயல்படும் ஜனா கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களுக்கு அரசியலில் இடம் இல்லை என்பது மட்டும் உண்மை!

– அ.வைத்தியநாதன்

Image 1544697

அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.

இந்த தொடரின் அடுத்த கட்டுரை, மார்ச் 9 ம் தேதி காலை 7:00 மணிக்கு (இந்திய நேரம்) தினமலர் இணையதளத்தில் வெளியாகும்.

Source link