வாஷிங்டன்: சட்டவிரோதமாக வசூலித்த வரியை திருப்பிச் செலுத்துமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகத்திற்கு வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்தார். இந்த வரி விதிப்புக்கு உலக நாடுகள் மட்டுமின்றி, உள்நாட்டிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, பரஸ்பர வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், சட்டவிரோதமாக கூடுதலாக வசூலித்த வரியை, இறக்குமதியாளர்களுக்கு வட்டியுடன் திரும்ப செலுத்துமாறு அமெரிக்க அரசு நிர்வாகத்திற்கு வர்த்தக நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ‘லிக்விடேஷன்’ என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அமெரிக்காவிற்குள் வரும்போது, ஒரு மதிப்பிடப்பட்ட தொகை செலுத்தப்படும். பின்னர், சுமார் 314 நாட்களுக்குப் பிறகு அந்தப் பொருளுக்கான தொகை இறுதி செய்யப்படும். தற்போது, இந்த வரிக் கட்டணம் இல்லாமல் பொருட்களின் விலையை இறுதி செய்து, மீதித் தொகையைத் திருப்பி வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கூடுதல் வரி விதிக்கப்பட்ட பிறகு, சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான இறக்குமதியாளர்கள் இந்த வரிகளைச் செலுத்தியுள்ளனர். இதன்மூலம், 11.91 லட்சம் கோடி ரூபாய் திருப்பி செலுத்தப்பட உள்ளது. இது டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாகும்.
