தஞ்சாவூர் மஹாராஜா திருமண மஹாலில் அமைச்சர் அன்பில் மகேஸ் சகோதரி மகள் ஓவியா – மனோஜ் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, கிருத்திகா, சபரீசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்காக மண்டபத்தின் உள்பகுதி அரண்மனை போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்டாலின் கலந்து கொண்டதால் போலீஸார் கடும் கெடுபிடி காட்டினர். இதையடுத்து வரவேற்று பேசிய உதயநிதி, `இது மூன்று தலைமுறை நட்பு’ என்றார். நன்றி தெரிவித்து பேசிய அன்பில் மகேஸ், `தமிழ்நாட்டின் முதல்வரும், பெரியம்மாவும் தாய், தந்தை ஸ்தானத்தில் இருந்து எங்களை வழி நடத்துகின்றனர்’ என்ற போது துர்கா ஸ்டாலின் கண்கள் கலங்கின.

இதைதொடர்ந்து துர்கா, `மாலையை எடுத்து ஸ்டாலின் கையில் கொடுத்து மணமக்களிடம் கொடுக்க சொன்னார். ஸ்டாலின் மணமகனிடம் மாலையை கொடுக்க மணமகள் கழுத்தில் போடுங்கனு துர்கா சொல்ல மணமக்கள் மாலை போட்டுக் கொண்டனர்.
இதே போல், வணங்கியபடி துர்கா தாலியை எடுத்து ஸ்டாலினிடம் கொடுக்க அவர் மணமகனிடம் கொடுத்தார். மணமகன் தாலி கட்டிய போது மாங்கல்யத்தை துர்கா பிடித்து கொண்டார். ஸ்டாலினும், துர்காவும் உற்சாகமாக திருமணத்தை நடத்தி வைத்தனர்.
மணமகள் ஓவியா காதில் ஏதோ சொல்லி விட்டு வெடித்து சிரித்தார் துர்கா. பின்னர் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அப்போது உதயநிதி கிருத்திகாவை அழைத்து தன் அருகில் நிற்க வைத்து கொண்டார். உதயநிதியும் சபரீசனும் சிரித்தபடி பேசிக்கொண்டே நின்றனர்.
`இன்பன், இனியன் என வாழையடி வாழையாக.!’
இதைதொடர்ந்து பேசிய ஸ்டாலின், “இந்த மணவிழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்த கூடிய சிறப்பான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. உதயநிதி குறிப்பிட்டதை போல் நமது குடும்பம் என்ற நிலையில் தான் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அன்பில், தலைவர் கருணாநிதிக்கு எந்த அளவிற்கு துணையாக இருந்தார் என்பது உங்களுக்கு தெரியும். கட்சி கம்பீரமாக ஓங்கி நிற்பதற்கு காரணகர்த்தாக்களில் ஒருவரான அன்பில், கடைசி வரை தலைவருக்கு பக்கபலமாக இருந்தார். அவரை தொடர்ந்து எனது நண்பன் அன்பில் பொய்யாமொழி எனக்கும், தற்போது அன்பில் மகேஸ் உதயநிதிக்கும் பக்கபலமாக இருக்கிறார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். புள்ளி விபரங்களை கையில் வைத்து கொள்ளாமல் கம்ப்யூட்டரை போல் பேசக் கூடிய ஆற்றல் பெற்றவர் அன்பில் மகேஸ். அவரை எல்லோரும் பாராட்டும் போது, நண்பன் அன்பில் பொய்யாமொழி இருந்தால் எந்த அளவிற்கு சந்தோஷபடுவாரோ அதைவிட கூடுதலாக நான் சந்தோஷப்படுகிறேன்.
இந்த குடும்ப நட்பு, உறவு மகேஸ், உதயநிதியுன் முடியப்போவதில்லை. அவர்களுடைய மகன்கள் இன்பன், இனியன் என வாழையடி வாழையாக தொடர்கிறது.
ஆல் பினிஷ்
இந்த மணவிழா நிகழ்சிக்கு எந்த சூழ் நிலையில் நான் வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். நேற்று இரவு கூட்டணி கட்சியுடன் பேசி வெற்றிகரமாக ஒப்பந்தம் முடித்து விட்டு, எல்லோரும் பாராட்டும் வகையில் முடித்து விட்டு வந்திருக்கிறேன். கூட்டணி ஒப்பந்தம் ஆனதை ஆக்சனோடு சொன்னேன். இது திட்டமிட்டு செய்யவில்லை. காரில் ஏற வரும் போது பத்திரிக்கை நண்பர்கள் கேட்டதற்கு ஆல் பினிஷ் முடிஞ்சுச்சினு சொன்னேன் அது இன்றைக்கு வைரலாகி விட்டது. அந்த மகிழ்ச்சியோடு வந்திருக்கிறேன்.

ராஜ்யசபாவிற்கு இரண்டு பேரை அறிவித்திருக்கிறோம். கூட்டணி கட்சிக்கு இரண்டு கொடுத்திருக்கிறோம். அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதால் வேகமாக செல்கிறேன்.
இது காதல் திருமணம், இதற்கு மணமகளின் அம்மா சுகி ஒப்புக்கொள்ளவில்லை, ஆனால் நாங்கள் சொன்னால் கேட்டுக் கொள்வார். செந்தாமரை எப்படி எனக்கு மகளோ, அது போல் சுகி என்கிற எழிலரசியும் எனக்கு மகள் தான். என் மகள் செந்தாமரையும், சுகியும் நல்ல நட்போடு பார்டனராக இருந்து தொழில்கள் செய்து வருகின்றனர். இந்த திருமணத்தில் நான் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
