சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியில் அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு வரும் 16ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. 4 இடங்களை திமுக கைப்பற்றும், 2 இடங்களை அதிமுக கைப்பற்றும் அளவுக்கு இரு கட்சிகளுக்கும் எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. 2 எம்பி பதவிகளை கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேமுதிகவுக்கு திமுக வழங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள்.
இந்நிலையில் இன்று (மார்ச் 05) சென்னை தலைமை செயலகத்தில், அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பி பதவிக்கு தம்பிதுரை இபிஎஸ் முன்னிலையில் தம்பிதுரை வேட்பு மனு தாக்கல் செய்தார். பாமக தலைவர் அன்புமணியும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதேபோல், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக தரப்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். தேமுதிக சார்பில் சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கின்றனர்.
விஜயகாந்த் நினைவிடத்தில் வேட்புமனுவை வைத்து சுதீஷ் ஆசி பெற்றார். முதல்முறையாக பார்லிமென்ட் பிரதிநிதித்துவத்தை தேமுதிக பெறுகிறது.
