சென்னை: ‘திமுக கூட்டணியை உடைத்திடலாம் என அரசியல் எதிரிகள் முயற்சி செய்தனர்’ என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது கடிதம்: திமுக என்றாலே குடும்பம்தானே; அதுதான் நமக்குப் பெருமை. நம் அரசியல் எதிரிகளுக்கோ அவர்களின் வயிறு எரியச் செய்யும் பொறாமை. என்ன செய்வது? 75 ஆண்டுகளைக் கடந்த இந்தப் பெருங்குடும்பத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஓரிடத்தில் ஒன்றுகூடி, திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என உறுதியேற்று, களம் காணும் பட்டாளமாக அணிவகுக்கும்போது, எதிரிகள் நடுங்குவது இயல்புதானே! உங்களில் ஒருவனான என்னைப் பொறுத்தவரை, நான் எதிரிகளின் செயல்பாடுகளைக் பற்றிக் கவலைப்படுபவனல்ல.
தேர்தல் களம்
திமுகவின் வளர்ச்சி, அதன் ஆட்சிக்காலத் திட்டங்களால் தமிழகத்தின் முன்னேற்றம், தமிழர்கள் ஒவ்வொருவரும் அடைய வேண்டிய உயர்வு இவை பற்றி சிந்தித்து, அதற்காக என் சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருப்பவன். என்னைப் போலவே, கட்சியினரையும் உழைக்கச் செய்பவன்.
உழைப்பு வீண் போகாமல் அவற்றை மொத்தமாக அறுவடை செய்ய வேண்டிய காலம்தான், 2026 தேர்தல் களம்.
அந்தக் களத்திற்கு நம்மை ஆயத்தமாக்கிக் கொள்ள திருச்சி சிறுகனூரில் ஒன்றாகக் கூடுகிறோம். திமுக ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்தியுள்ளோம்.
ஏங்கிக் கிடந்தார்கள்
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக உருவான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 தமிழக சட்டசபை தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 லோக்சபா தேர்தல், பல இடைத்தேர்தல்கள், எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தல் எனத் தொடர்வது மட்டுமல்ல, புதிதாக மேலும் பல கட்சிகள் நம் கூட்டணியில் இணைந்து கூடுதல் வலிமையைப் பெற்றிருக்கிறோம். அதனால்தான், அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள்.
கற்பனை கோட்டை
நம்மிடமிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்றும், இவர்கள் பிரிந்து போகப் போகிறார்கள் என்றும் கனவில் கணக்கு போட்டு கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள். அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் ரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம்.
கடந்த 2021 தேர்தல் சிறப்பு மாநாட்டில் உங்களிடம் நான் வைத்த கோரிக்கை, ‘திமுகவிற்கு 10 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆள்கின்ற வாய்ப்பைத் தாருங்கள். அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகால அளவுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ள தமிழகத்தை மீட்டு உயர்த்திக் காட்டுவோம்’ என்பதுதான். அதை நிறைவேற்றித் தாருங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
