நமது நிருபர்
இலங்கை கடற்கரையில் தங்கள் நாட்டு போர்க்கப்பலான ‘டீனா’வை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்ததுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்கா செய்த இந்த கொடூரச் செயலுக்கு நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்தார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பிப்., 18 முதல் 25 வரை இந்தியாவின் அழைப்பின் பேரில், வங்கக் கடலில் ஈரானின் ‘ டீனா’ போர்க் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. பயிற்சி நிறைவுக்கு பிறகு, தாயகம் நோக்கி பயணித்தது.
இலங்கையின் காலி துறைமுகம் அருகே இந்தியப் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த அந்த போர்க் கப்பலை, டர்பிடோ ஏவுகணை தாக்குதல் நடத்தி அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நேற்று மூழ்கடித்தது. இதில், 87 பேர் பலியாகினர்.
டீனா கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்ததுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்தது. அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரானின் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது. 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற ஈரான் போர்க்கப்பல் இந்தியாவுக்கு விருந்தினராக சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்கப்பட்டது. நான் சொல்வதை நன்றாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த கொடூரச் செயலைச் செய்ததுக்கு அமெரிக்கா நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும். இவ்வாறு அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார்.
