உடம்பு சரியில்லை… டாக்டரிடம் சென்று மருத்துவம் பார்த்தால், அவர்கள் நமக்கு மருந்து கொடுக்கும் முன் கேட்கும் முதல் கேள்வி – ‘வேற எதாவது மருந்து சாப்பிட்டுட்டு இருக்கீங்களா?’.
இங்கு, ‘வேற எதாவது மருந்து’ என்று சித்த மருத்துவர்கள் ‘ஆங்கில மருந்துகளையும்’, ஆங்கில மருத்துவர்கள் ‘சித்த மருந்துகளையும்’ குறிப்பிடுகிறார்கள்.
அலோபதி மருந்துகளையும், சித்த மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று பொதுவாகக் கூறப்படுகிறது.
அது உண்மையா என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா.

“ஆங்கில மருத்துவம் என்று சொல்லப்படும் அலோபதி மருத்துவம் பொதுவாக நோயின் அறிகுறிகளை வேகமாகக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் செயல்படுகிறது.
இதனால் வலி, காய்ச்சல், தொற்று போன்ற பிரச்னைகள் விரைவாகக் குறையும்.
ஆனால், சித்த மருத்துவம் நோயின் மூல காரணத்தை அறிந்து உடலின் சமநிலையைச் சரிசெய்து, உடலின் இயல்பான எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நோய் மீண்டும் வராமல் காக்க உதவுகிறது.
இது தான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்”.
அலோபதி மற்றும் சித்த மருந்துகளை ஒன்றாக எடுத்துக்கொள்ளலாமா?
எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கென தனி முறை உண்டு.
இரண்டு மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் உடலில் எதிர்வினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இன்னொரு பக்கம், மருந்தின் வீரியம் குறையலாம். சில நேரங்களில், மருந்தின் செயலே தடைப்படலாம். இன்னும் ஒரு படி மேலே சென்று, நச்சுத்தன்மை கூட ஏற்படலாம்.
அதனால், இரண்டு மருந்துகளையும் ஒன்றாக… ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்துவிட வேண்டும்.

அலோபதி மருந்து, சித்த மருந்து இரண்டிற்கும் இடையே குறைந்தது 1 – 2 மணி நேரம் இடைவேளை இருக்க வேண்டும்.
மேலும் ஒரு மருந்தை உணவுக்கு முன்பும், மற்றொரு மருந்தை உணவுக்குப் பிறகும் எடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகள் போன்றவர்கள் இந்த இரண்டு மருத்துவ முறைகளையும் சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது அதிக கவனம் அவசியம்.
இதனால் யாராக இருந்தாலும், இரு மருந்துகளையும் எடுத்துக்கொள்ளும் போது, மருத்துவரிடம் இருந்து தகுந்த ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது சிறந்தது.
இரு மருந்துகளையும் சேர்த்து எடுத்தால் சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா?
இதை நிச்சயமாகக் கூற முடியாது. எந்த மருந்தாக இருந்தாலும் அதிக அளவில் அல்லது நீண்ட காலம் எடுத்துக்கொண்டால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்குச் சுமை அதிகரிக்கும்.
குறிப்பாக மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தை அதிகரிக்கும்.
