எந்த பிரச்னைக்கும் போர் தீர்வல்ல; பின்லாந்து அதிபரை சந்தித்த பிறகு மோடி பேட்டி

புதுடில்லி: ”உலகளாவிய எந்த பிரச்னைக்கும் போர் தீர்வல்ல. மோதல்களை பேச்சுவார்த்தை வாயிலாக தீர்க்க வேண்டுமே தவிர ராணுவ நடவடிக்கையால் தீர்க்கக் கூடாது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் இன்று பிரதமர் மோடியை பின்லாந்து அதிபர் ஸ்டப் சந்தித்து, இருதரப்பு உறவை வலுப்படுத்து குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டுக்கும் இடையே இன்று பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் பின்லாந்து அதிபர் மற்றும் பிரதமர் மோடி கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர்கள் நடந்து வரும் நிலையில், உலக அமைதிக்கான இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

அவர் கூறியதாவது: எந்த பிரச்னைக்கும் போர் தீர்வல்ல. ஈரான் மோதலை நிறுத்த வேண்டும். மோதல்களை ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

பயங்கரவாதத்தை முற்றிலுமாக வேரறுக்க வேண்டும். உக்ரைனாக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியாக இருந்தாலும் சரி மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம். உலகளாவிய நிறுவனங்களில் சீர்த்திருத்தங்கள் கொண்டு வருவது அவசியமாகும். இதனை விரைவில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

செல்வாக்கான நாடு

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் கூறியதாவது: இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க நாடுகளில் ஒன்றாகும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் நான் மிகவும் மதிக்கும் விஷயம் என்னவென்றால், யதார்த்தமான உலகக் கண்ணோட்டத்தில் அடிப்படையாக கொண்டது. இவ்வாறு அலெக்சாண்டர் ஸ்டப் கூறினார்.

Source link