புதுடில்லி: ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், வளைகுடா கடல் பகுதிகளில் மட்டும் 23 ஆயிரம் இந்திய மாலுமிகள் சிக்கி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கடல்வழிப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் போக்குவரத்தைக் கையாளும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், அந்த வழியிலான முக்கிய எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
அதேவேளையில், ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பலுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்பும் தெரிவித்துள்ளார். இந்தப் போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தாமல், வளைகுடா கடல்பகுதிகளில் ஏராளமான கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், மத்திய அரசுக்குச் சொந்தமான ‘ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ நிறுவனத்தில் 7 கப்பல்கள் உள்பட இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 36 கப்பல்கள் வளைகுடா பகுதிகளில் சிக்கியுள்ளன. இந்த கப்பல்களில் மட்டும் 1,074 இந்தியப் பணியாளர்கள் உள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், வளைகுடா பிராந்தியத்தில் இருக்கும் கப்பல்களில் 23,000 இந்திய மாலுமிகள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒருமுறை இந்திய கப்பல்களின் நிலை குறித்து மத்திய அரசு கண்காணித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தாலும், மிகவும் ஆபத்தான செங்கடல் வழியை இந்திய கப்பல்கள் ஏதும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
