சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பதவி வகிக்கிறார். இவர், மார்ச் 5ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார்.
இவருக்கு பிறகு, யாரை தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று முடிவெடுக்க, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் கூட்டம் நடந்தது. இதில், கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியான சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை ஏற்று, சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார். அவர் விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த தர்மாதிகாரி
தர்மாதிகாரி, மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றியவர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சொந்த ஊராக கொண்டவர். மத்திய பிரதேசத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
