டெஹ்ரான்: கத்தாரில் செயல்பட்டு வந்த அமெரிக்காவின் கண்கள் போன்ற அதிநவீன ரேடார் அமைப்பை, ஈரானியப் படைகள் தாக்கி அழித்தன. இதனால், அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் கண்காணிப்புத் திறன் முடக்கியுள்ளது.
மேற்காசிய நாடான கத்தாரில், அமெரிக்காவின் மேம்படுத்தப்பட்ட முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் அமைப்பு செயல்படுத்தப்பட்டு வந்தது. இது, 5,000 கி.மீ., தொலைவு வரையுள்ள ஏவுகணைகள் மற்றும் பிற வான்வழி அச்சுறுத்தல்களை கண்காணித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் திறன் கொண்டது.
இந்த ரேடார், தற்போது ஈரானின் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த அமைப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பால், அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகளின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் கண்களை ஈரான் பிடுங்கி விட்டது என்றே கூறவேண்டும். மேற்காசியாவில் அமெரிக்க படைகளால் இயக்கப்படும் மிகப்பெரிய ரேடார் அமைப்பை, பாதுகாப்பு வளையத்தை உடைத்து ஈரானிய படைகள் துல்லியமாக தாக்கியதால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் தீயணைப்பு முயற்சிகள் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
