டெஹ்ரான் : அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தங்கள் நாட்டு போர் கப்பலை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்குமாறு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த வாரம் துவங்கிய இத்தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.இதைத்தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஆறாவது நாளாக நேற்றும் இரு தரப்பும் தாக்குதல்களில் ஈடுபட்டன.
இந்நிலையில், நம் நாட்டின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் இரண்டு நாள் கடற்படை பயிற்சிகள் நடந்தது. இதில் பங்கேற்றுவிட்டு, ஈரான் திரும்பிக் கொண்டிருந்த போது, இலங்கையின் காலி துறைமுகம் அருகே இந்தியப் பெருங்கடலில் பயணித்த ஈரானின் ‘ஐரிஸ் டீனா’ என்ற போர்க் கப்பலை, ‘டார்பிடோ’ எனப்படும் நீரில் செல்லும் ஏவுகணை வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நேற்று தாக்கி அழித்தது; இதில், 87 பேர் பலியாகினர்.
இதைத்தொடர்ந்து, ஈரானின் இரண்டாவது போர்க் கப்பல், 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், இலங்கை கடற்பகுதி அருகே வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கப்பலும் அமெரிக்காவால் குறி வைக்கப்படலாம் என்ற அச்சத்தில், போர்க் கப்பலின் பாதுகாப்பிற்காக அதனை இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்குமாறு இலங்கையிடம் ஈரான் கோரிக்கை வைத்துள்ளது.
இக்கோரிக்கை குறித்து இன்னும் இலங்கை பதிலளிக்கவில்லை என்றாலும், ஈரானின் கோரிக்கை குறித்து விவாதிக்க இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஈரான் மோதலில் இலங்கை இதுவரை நடுநிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று நடந்த டார்பிடோ தாக்குதலில் கொல்லப்பட்ட 87 பேரின் உடல்களை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கப்பலில் இருந்த, 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க கப்பல் மீது ஈரான் தாக்குதல்
இந்தியப் பெருங்கடலில், அமெரிக்க நீர்மூழ்கி கப்பல், ஈரானிய போர்க் கப்பலை மூழ்கடித்த சிலமணி நேரங்களுக்கு பின், ஈரானின் வடக்கு பகுதியில் அமெரிக்காவின் எண்ணெய் டேக்கர் கப்பலை தாக்கியதாக ஐ.ஆர்.ஜி.சி., எனும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.தாக்கப்பட்ட அமெரிக்க கப்பல் தீப்பற்றி எரிவதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத்தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விபரங்கள் இன்னும் தெரியவில்லை.
இது குறித்து அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத் கூறியுள்ளதாவது:சர்வதேச கடற்பகுதியில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்த ஈரானிய போர்க் கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மூழ்கடித்ததையடுத்து, அமைதியான மரணத்தை தழுவியது.இவ்வாறு அவர் கூறினார்.
தவறான முன்னுதாரணம்
தங்கள் போர்க் கப்பல் நடுக்கடலில் தாக்கி அழிக்கப்பட்டது குறித்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி கூறியுள்ளதாவது:இந்தியக் கடற்படையின் விருந்தினராக சென்று திரும்பிய ஐரிஸ் டீனா கப்பல், சர்வதேச நீர்வழித் தடத்தில் முன்னறிவிப்பின்றி தாக்கப்பட்டது. நடுக்கடலில் நடந்த இந்தக் கொடுமை, ஒரு தவறான முன்னுதாரணம். இந்த மோசமான செயலுக்கான அமெரிக்கா மிகுந்த வருத்தப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய கடற்படை உதவி
இதனிடையே அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதலுக்கு உள்ளான ஈரான் கப்பலில் இருந்து வந்த அழைப்பை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இதற்காக ரோந்து படகு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
