வாஷிங்டன் : சட்டவிரோதமாக பரஸ்பர வரிகள் மூலம் வசூலித்த, 12 லட்சம் கோடி ரூபாயை திருப்பி தருமாறு அமெரிக்க அரசுக்கு, அந்த நாட்டின் வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி உலக நாடுகள் மீது அதீத அளவில் பரஸ்பர வரிகளை விதித்தார்.இதையடுத்து, உலக நாடுகள் கடும் அதிருப்தி அடைந்தன. மேலும், அமெரிக்காவிலேயே டிரம்பின் இவ்வரி விதிப்பு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாகாணங்கள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்கள் இணைந்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இவ்வழக்கை விசாரித்த உச்ச நிதிமன்றம், ‘பார்லிமென்டின் அனுமதியின்றி, அதிபர் தன் விருப்பத்துக்கு பிற நாடுகள் மீது வரியை விதிக்க முடியாது’ என கூறி பரஸ்பர வரி விதிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
வசூலித்த வரியை திருப்பி தருவது குறித்த வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்காததால் இறக்குமதியாளர்களுக்கு எப்படி பணம் திரும்ப கிடைக்கும் என்பதில் குழப்பம் நிலவி வந்தது.
டிரம்பின் வர்த்தக கொள்கையின் முக்கிய அங்கமாக இருந்த இச்சட்டவிரோத வரி விதிப்பு வாயிலாக அமெரிக்க அரசு, 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வசூலித்தது. வரி ரத்து அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா வசூலித்த பரஸ்பர வரி எப்போது கிடைக்கும் என வர்த்தகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மூன்று லட்சத்துக்கும் அதிகமான இறக்குமதியாளர்கள் பரஸ்பர வரி விதிப்பின் கீழ் வரிகளை செலுத்தியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறு தொழிலதிபர்கள். இதையடுத்து, வரி விதிப்பை திரும்ப பெறக் கோரி கிட்டத்தட்ட 2,000 வழக்குகள் அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் விசாரித்து வந்தது. பரஸ்பர வரி விதிப்பின் வாயிலாக வரி செலுத்திய இறக்குமதியாளர்களின் கோடிக்கணக்கான ரூபாயை திருப்பி செலுத்த துவங்குமாறு உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக விசாரிப்பதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட அனைத்து இறக்குமதியளர்களும் எளிதில் பணத்தை திரும்ப பெறுவதற்கு ஒரு பொதுவான முறையை உருவாக்க வேண்டும் என நீதிமன்றம் விருப்பம் தெரிவித்துள்ளது.மேலும், வசூலித்த தொகையை திருப்பி தருவதற்கான செயல் திட்டம் குறித்து தெரிவிக்கும்படியும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
