தீயா யாதவ் இரட்டை சதம் * 'ஒன் டே' டிராபி தொடரில்…

புதுச்சேரி: ‘ஒன் டே’ டிராபி தொடரில் இரட்டை சதம் விளாசினார் இளம் தீயா யாதவ்.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ‘ஒன் டே’ டிராபி எலைட் தொடர் நடத்தப்படுகிறது. நேற்று புதுச்சேரியில் நடந்த போட்டியில் ஹரியானா, திரிபுரா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஹரியானா, பேட்டிங் செய்தது.

ஹரியானா அணிக்கு தனிஷ்கா, தீயா யாதவ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 30.4 ஓவரில் 181 ரன் சேர்த்த போது, 79 ரன் எடுத்த தனிஷ்கா அவுட்டானார். கேப்டன் சோனியா (52) அரைசதம் அடித்தார்.

மறுபக்கம் மின்னல் வேகத்தில் ரன் சேர்த்த 16 வயது தீயா, இரட்டை சதம் அடித்தார். ஹரியானா அணி 50 ஓவரில் 356/3 ரன் குவித்தது.

தீயா, 147 பந்தில் 206 ரன் (7 சிக்சர், 22 பவுண்டரி) எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

அடுத்து களமிறங்கிய திரிபுரா அணி, கேப்டன் அம்பேஷா (28), தனிஷா (21), சேபிகா (10) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. திரிபுரா அணி 50 ஓவரில் 109/9 ரன் மட்டும் எடுத்தது. ஹரியானா 247 ரன்னில் வென்றது.

இரண்டாவது முறை

கடந்த 2023ல் நடந்த 15 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ‘ஒன் டே’ டிராபி தொடரில் தீயா, 125 பந்தில் 213 ரன் (எதிர்-திரிபுரா) எடுத்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்துள்ளார் தீயா.

தமிழகம் அபாரம்

நேற்று புதுச்சேரியில் நடந்த மற்றொரு போட்டியில் தமிழகம், விதர்பா அணிகள் மோதின. முதலில் களமிறங்கி, விதர்பா, 46 ஓவரில் 142 ரன் எடுத்தது. தமிழக அணி 38.1 ஓவரில் 143/5 ரன் எடுத்து, 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

Source link