மதுரை: கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் விபரங்களை அறநிலையத்துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கரூர் மாவட்டம் காதப்பாறையில் ஒரு கல்வி அறக்கட்டளை பள்ளியை நடத்துகிறது. குறிப்பிட்ட சர்வே எண்ணில் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அப்பள்ளிக்கான விளையாட்டு மைதானமாக கோயில் நிலத்தை அறக்கட்டளை நிர்வாகம் பயன்படுத்துகிறது. அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு திருமண மண்டபமும் உள்ளது. அங்கு வரும் வாகனங்களை நிறுத்த கோயில் நிலத்தை பயன்படுத்துகிறது. அந்நிலத்தை ஒருவரின் சட்டபூர்வ வாரிசுகளிடமிருந்து உள்குத்தகைக்கு அறக்கட்டளை பெற்றது. குத்தகையை உயர்த்தி அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவிட்டார். அதற்கு எதிராக அறக்கட்டளை நிர்வாகம், ‘முன் அறிவிப்பு செய்யாமல் பலமடங்கு குத்தகைத் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,’என மனு செய்தது.
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அறநிலையத்துறை சட்டப்படி அத்துறை கமிஷனரின் அனுமதியின்றி கோயில் நிலத்தை 5 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்குவிட முடியாது. அதற்கு அரசின் முன் அனுமதி இல்லாமல் கமிஷனர் ஒப்புதல் வழங்க முடியாது. இவ்வழக்கில் மனுதாரர் எவ்வித அனுமதியோ அல்லது அரசின் ஒப்புதலோ இல்லாமல் 30 ஆண்டுகளுக்கு உள்குத்தகை பெற்றுள்ளார். விதிகளை மீறியதால், குத்தகை ஒப்பந்தம் செல்லுபடியாகாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அறக்கட்டளை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.
நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் சுப்பாராஜ், கோயில் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம், வழக்கறிஞர் ஆதிமூலபாண்டியன் ஆஜராகினர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் பயன்படுத்தும் நிலம் ஒரு மத நிறுவனத்திற்கு சொந்தமானது. அந்நிலம் தொடர்பாக மனுதாரருக்கு எந்த சட்டபூர்வமான குத்தகையும் இல்லை. அந்நிலத்தை மனுதாரர் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகிறார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இந்நீதிமன்றம் கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை பிறப்பிக்கிறது:
* கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் விபரங்களை அதாவது நிலத்தின் பரப்பளவு, குத்தகைக்காலம், குத்தகைதாரர்கள், குத்தகைத் தொகையை அறநிலையத்துறை தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இத்தகவல்கள் மக்கள் எளிதில் பெறக்கூடியதாக இருக்க வேண்டும். இதன் மூலம், அச்சொத்துக்களில் ஆர்வம் உள்ளவர்கள் பொது ஏலத்தில் பங்கேற்க முடியும். இதனால் அச்சொத்துகளுக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
* சட்டம், விதிகளை கடுமையாக அறநிலையத்துறை பின்பற்ற வேண்டும். இவ்வழக்கில் காணப்படுவது போல் கமிஷனரின் அனுமதி இல்லாமல் 5 ஆண்டுகளுக்கு மேல் எந்த குத்தகைதாரர்களிடமும் கோயில் சொத்துக்கள் இல்லாமல் இருப்பதை உறுதி வேண்டும். மேலும் மத நிறுவங்களின் அசையா சொத்துகளின் குத்தகை விதிகள்படி அச்சொத்துகளை பொது ஏலம் மூலம் மட்டுமே குத்தகைக்கு விடப்படுவதை அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும்.
* இம்மனுதாரரிடமிருந்து நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
