போர் காலத்தில் முதலீடு செய்வது, சந்தையுடன் போராடுவது அல்ல; அது முதலீட்டாளர்கள் தங்கள் சொந்த மனநிலையுடன் நடத்தும் ஒரு உளவியல் போராட்டம். வெற்றிகரமான முதலீடு என்பது சந்தையை வெல்வது மட்டும் அல்ல; அது முதலீட்டாளர்கள் தங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறனையும் சார்ந்துள்ளது. எப்படி என்பதை பார்க்கலாம்…
ஏற்ற இறக்கம் போரின் அச்சுறுத்தல் உருவாகும்போது, முதலீட்டாளர்கள் மிக மோசமான நிலையை எதிர்பார்க்கத் துவங்குவதால், பங்குகளின் விலை முன்கூட்டியே சரிவதைக் காணலாம். இதனால்தான் பழைய சந்தைப் பழமொழி ஒன்று கூறுகிறது, ‘பீரங்கிச் சத்தம் கேட்கும்போது வாங்கவும்; வெற்றி சத்தம் கேட்கும்போது விற்கவும்’ என்று.
இதற்கான ஒரு முக்கிய வரலாற்று உதாரணம், 1991-ம் ஆண்டு பாரசீக வளைகுடா போர். போர் துவங்குவதற்கு முன்பு உலகளவில் மிகுந்த பதற்றம் நிலவியது; பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன. ஆனால், போர் ஆரம்பமான பின், சந்தைகள் எதிர்பாராத விதமாக உயர்ந்தன.
காரணம்: மோசமான செய்திகள் ஏற்கனவே விலைகளில் சேர்க்கப்பட்டிருந்தன.
இதே போக்கு, 2003ம் ஆண்டு ஈராக் போர் துவங்கிய காலத்திலும் காணப்பட்டது. போர் ஆரம்பிக்கும் முன், உலக சந்தைகள் கவலையுடன் இருந்தாலும், ஆரம்பக் கட்டத்திலேயே பல சந்தைகள் மீண்டும் உயரத் துவங்கின.

உளவியல் சார்புகள் போரின் போது தகவல்கள் வேகமாக பரவுவதால், முதலீட்டாளர்கள் பல உளவியல் சார்புகளின் தாக்கத்துக்கு உட்படுகின்றனர். அவை தவறான முடிவுகளை உருவாக்கக்கூடும்.
சிலர் செய்திகளைக் கண்டு விற்கத் துவங்கினால், மற்றவர்களும் அதையே பின்பற்றுகின்றனர். கூட்ட மனநிலை சந்தை வீழ்ச்சியை அதிகப்படுத்தும்
நீண்டகால புள்ளிவிபரங்களை விட்டுவிட்டு, உடனடியாக கண்களில் படும் போர் தொடர்பான தலைப்புச் செய்திகள் மீது, அதிக கவனம் செலுத்துவது.
சிறிய லாபம் கிடைத்தவுடன் நல்ல பங்குகளை விரைவாக விற்றுவிடுவது, ஆனால், இழப்பில் இருக்கும் பங்குகள் “ஒருநாள் மீண்டு வரும்” என்ற நம்பிக்கையில், நீண்ட காலம் வைத்திருப்பது.
லாபம் தரும் மகிழ்ச்சியை விட, இழப்பு தரும் வேதனை அதிகமாக உணரப்படும். இதனால் விலை வீழ்ச்சியடையும் நேரங்களில் சரியான முடிவெடுக்க முடியாமல் போகிறது
சந்தையில் பெரும்பாலானவர்கள் ஒரே மாதிரியாகச் சிந்திக்கத் துவங்கும் போது, அந்தக் கருத்து பெரும்பாலும் தவறாக இருக்கும். அதனால் சில அனுபவமுள்ள முதலீட்டாளர்கள் எதிர்மறைச் சிந்தனை அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றனர்
போர் செய்திகளால் சந்தை கடுமையாக வீழ்ச்சியடையும் நேரத்தில், பெரும்பாலானவர்கள் விற்று முடித்திருப்பர். அந்த தருணங்களில் சில நேரங்களில் மிகச்சிறந்த வாங்கும் வாய்ப்புகள் உருவாகலாம்.

முதலீடுகளை பாதுகாக்கும் தந்திரங்கள்
1 உணர்ச்சிகள் பாதிக்காத அமைதியான நேரத்தில் தெளிவான முதலீட்டுத் திட்டத்தை உருவாக்குவது
2 அதிக லாபம் தேடுவதற்கு முன், முதலீடு செய்ததை பாதுகாப்பது
3 முதலீடுகள் உறக்கத்தை பாதிக்கத் துவங்கினால், அது, நம் சகிப்புத்தன்மையை விட அதிகமாக இருக்கிறது என்பதைக் குறிக்கும்.
4 ஒரு முதலீட்டில் எதிர்பார்க்கப்படும் லாபம், ஏற்படக்கூடிய இழப்பை விட குறைந்தது மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்
5 முதலீடு செய்வதற்கு முன், மிக மோசமான சூழ்நிலையில் என்ன நடக்கும் என்று முதலில் சிந்திக்க வேண்டும்
6 பங்குகளின் விலையை தொடர்ந்து கண்காணிப்பது உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை துாண்டலாம்.
