புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க, இந்தியாவுக்கு உடனடியாக 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் காரணமாக, உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ முடங்கியுள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40 சதவீதம் இப்பாதை வழியாகவே நடைபெறுகிறது.
இந்தியாவிடம் தற்போது அடுத்த சில வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு மட்டுமே உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கையிருப்பும் குறைவதால் மாற்று வினியோக வழிகளை தேட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்திய கடல் எல்லைக்கு அருகே உள்ள தனது கப்பல்கள் வாயிலாக, சில வாரங்களுக்குள் 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதம் வரை பூர்த்தி செய்யவும் ரஷ்யா தயாராக உள்ளது.
இவ்வாறு தெரிவித்தன.
அமெரிக்காவின் அழுத்தத்தால், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை சமீப காலமாக இந்தியா கணிசமாக குறைத்துள்ளது. எனினும், தற்போதைய நெருக்கடியான சூழலில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
