நமது சிறப்பு நிருபர்
‘ஏழை கடவுளுக்கு ஓட்டுரிமை இல்லை. ஆனால் வலிமை மிக்க ஆக்கிரமிப்பாளர்களிடம் மதிப்புமிக்க ஓட்டுரிமை உள்ளது,’ என கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்தது.
கோயில் நிலம் தொடர்பான வழக்குகளை கையாளும் சிவில் நீதிமன்றங்கள், முன்னுரிமை அடிப்படையில் 6 மாதங்களுக்குள் தீர்வு காண வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: கரூர் மாவட்டம் வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இதற்கு சொந்தமாக காதப்பாறை, ஆத்துாரிலுள்ள 500 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2019 அக்.23 ல் இரு நீதிபதிகள் அமர்வு,’ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் சொத்துக்களை மீட்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என உத்தரவிட்டது.
இதை நிறைவேற்றாததால் அறநிலையத்துறை கமிஷனராக இருந்த முரளிதரன், கரூர் கலெக்டராக இருந்த தங்கவேல், கோயில் செயல் அலுவலராக இருந்த சுகுணா மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:இக்கோயில் நிலம் தொடர்பாக பல்வேறு சிவில் வழக்குகள் உள்ளன.
40 வழக்குகளில் மட்டுமே இடைக்காலத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வழக்குகளில் இடைக்கால உத்தரவுகள் இல்லாத போதிலும், அந்த ஆக்கிரமிப்பாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பிலுள்ள கோயில் நிலத்தின் மொத்த பரப்பளவு 507.88 ஏக்கர். தற்போதுவரை 93.64 ஏக்கர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பாளர்கள் யார்
இந்நீதிமன்ற உத்தரவுப்படி 2025 நவம்பரில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசியல் தலைவர்கள், பிறரின் போராட்டங்கள் காரணமாக வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை. ஆக்கிரமிப்பாளர்களில் 27 பேர் அரசு அதிகாரிகள், 49 பேர் தொழிலதிபர்கள், 38 பேர் செல்வாக்குமிக்கவர்கள். அவர்களின் சமூக, அரசியல் நிலையே இந்நீதிமன்றத்தின் உத்தரவுகளை அதிகாரிகளால் நிறைவேற்ற முடியாமல் தயங்குவதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்ற கவலைக்கிடமான விஷயத்தை புறக்கணிக்க முடியாது.
கடவுளுக்கு ஓட்டுரிமை இல்லை
ஏழை கடவுளுக்கு ஓட்டுரிமை இல்லை. ஆனால் வலிமைமிக்க ஆக்கிரமிப்பாளர்களிடம் மதிப்புமிக்க ஓட்டுரிமை உள்ளது. ஜனநாயக அரசியல் அமைப்பில், தேர்தல் கணிதம் சில நேரங்களில் நிர்வாக முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதுபோல் தோன்றலாம். ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி, தேர்தல் அரசியல் சலுகைகளுக்கு உட்பட்டதல்ல.
சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ நபராக அங்கீகரிக்கப்பட்ட கடவுள் தேர்தல்களில் பங்கேற்கவில்லை என்பதற்காக, அதை எந்த நிவாரண பாதுகாப்பும் இன்றி விட்டுவிட முடியாது. கடவுள் ஓட்டுப் பதிவு செய்யாமல் இருக்கலாம்; ஆனால் அரசியலமைப்பு பேசுகிறது. இந்நீதிமன்றம் மக்களின் நலனை பாதுகாக்க தனது அதிகாரத்தை பயன்படுத்தி செயல்படுகிறது. நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு அமைப்பு ரீதியான எதிர்ப்பினால் தடை ஏற்படுத்தும்போது, சட்டத்தின் ஆட்சி தானே சோதனைக்குள்ளாகிறது.
மக்கள் பிரதிநிதிகளாக இருப்பது வருத்தம்
சில அமைப்புகள் போராட்டங்களை ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. இப்போராட்டங்களில் பங்கேற்றவர்களில் சிலர் சட்டத் துறையில் உள்ளவர்களாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் இருப்பது மிக வருந்தத்தக்க நிலையாகும். இந்த அவமதிப்பு வழக்கை கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களுடன் இந்நீதிமன்றம் முடித்து வைக்கிறது.
* கோயில் நிலம் தொடர்பான வழக்குகளை கையாளும் சிவில் நீதிமன்றங்கள், அவற்றிற்கு முடிந்தவரை விரைவாக, முன்னுரிமை அடிப்படையில் 6 மாதங்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
* மீட்கப்பட்ட நிலம், துவங்கிய நடவடிக்கைகள், தாக்கல் செய்த சிவில் வழக்குகள், வழக்கின் நிலை மற்றும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்நீதிமன்றத்தில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை அறநிலையத்துறை தாக்கல் செய்ய வேண்டும்.
* ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதை கரூர் எஸ்.பி., உறுதி செய்ய வேண்டும்.
* கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கும் நடவடிக்கைக்கு எதிராக போராடிய அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து சங்கங்களின் பதிவாளர் விசாரித்து, சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது விருப்புரிமைக்குரிய விஷயம் அல்ல என்பது அதிகாரிகளுக்கு நினைவூட்டப்படுகிறது. நீதிமன்றத்தின் அதிகாரம், நிர்வாகத்தின் வசதியை சார்ந்ததல்ல. மாநில அரசின் நிர்வாக இயந்திரம் உறுதியாகவும், அரசியலமைப்பிற்கு உண்மையுடன் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
