சென்னை: ‘தி.மு.க., கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தவர்களின் கற்பனையையும் கனவுகளையும் ரசித்தபடி, அதை முறியடித்துள்ளோம்’ என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க., தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்: தி.மு.க., மாநில மாநாடு, வரும் 9ம் தேதி திருச்சி சிறுகனுாரில் நடக்க உள்ளது. 75 ஆண்டுகளை கடந்த தி.மு.க.,வின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும், ஓரிடத்தில் ஒன்றுகூடி, ‘மீண்டும் தி.மு.க., ஆட்சியை அமைப்போம்’ என உறுதியேற்று, களம் காணும் பட்டாளமாக அணிவகுக்கும்போது, எதிரிகள் நடுங்குவது இயல்பு தானே.
கருணாநிதி போல எனக்கு பேசவோ, எழுதவோ வராது. அவரிடம் நான் கற்றுக்கொண்டது உழைப்பு மட்டுமே; இந்த கட்சியை கட்டிக் காப்பதற்கான உழைப்பு. இந்திய அரசியல் வரலாற்றில், கூட்டணி கட்சிகளை கொள்கை நட்பாக அரவணைத்து, லட்சிய நோக்கத்துடன் பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
தி.மு.க., கூட்டணியில் புதிதாக பல கட்சிகள் இணைந்து, கூடுதல் வலிமையைப் பெற்றிருக்கிறோம். அதனால் தான், அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம் கூட்டணி உடையாதா என ஏங்கிக் கிடந்தனர்.
நம்மிடமிருந்து, ‘அவர்கள் வெளியேறி விடுவர், இவர்கள் பிரிந்து போவர்’ என்று, கனவில் கணக்கு போட்டு, கற்பனை கோட்டைகளைக் கட்டினர்.
கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தனர். அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் ரசித்தபடி, அதை முறியடித்து நம் பணியை மேற்கொண்டோம்.
நம் பயணத்தில் இணைந்திட விரும்பிய கட்சிகளுக்கும் இடமளித்து, உறுதியான வெற்றிக்கான கூட்டணியை, உங்களில் ஒருவனான நான் தலைமையேற்று தொடர்கிறேன்.
மேலும் ஐந்து ஆண்டு கால ஆட்சியை அமைத்திட வேண்டும்; மீண்டும் திராவிட மாடல் அரசு அமைந்திட வேண்டும். தீரர் கோட்டமாம் திருச்சியில் கூடுவோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்திட உறுதியேற்று களம் காண்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
