சென்னை: கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சென்னை குடிநீர் வாரியத்திற்கு ரூ.551 கோடி

சென்னை: கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சென்னை குடிநீர் வாரியத்திற்கு ரூ.551 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக இருந்து வந்தது. எனவே, இதனை தடுத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, ரூ.235 கோடி செலவில் கொடுங்கையூரிலும், ரூ.396 கோடி செலவில் கோயம்பேட்டிலும் தலா 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டமானது, சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்திற்கு அதிக வருவாயையும் ஏற்படுத்தியுள்ளது.

2020ஆண்டு முதல் மணலி, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 3ம் நிலை சுத்திகரிப்பு நீரை வழங்கியதன் மூலம் சென்னை குடிநீர் வாரியம், ரூ.550.56 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதேபோல, அரசு தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 74,249 மில்லியன் லிட்டர் தூய்மையான தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. இது சென்னை மாநகரத்தின் 2 மாத குடிநீர் விநியோகத்திற்கு இணையானது.

மணலி தொழிற்சாலைகளுக்கு ஒரு கிலோ லிட்டர் ரூ.80க்கும், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு ஒரு கிலோ லிட்டர் ரூ.65க்கும் சுத்திகரிப்பு நீர் விற்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாதம் ரூ.7.63 கோடி வருமானம் கிடைக்கிறது. மேலும், பூங்கா பராமரிப்பு உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பல்வேறு பணிகளுக்கு இரண்டாம் நிலை சுத்திகரிப்பு நீரை விற்பனை செய்வதன் மூலம் மாதம் ரூ.1.80 கோடி வருவாய் கிடைக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில் தற்போது 13 சதவிதம் மட்டுமே தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் பயன்படுத்தப்படுகிறது. இது 2019ல் வெறும் 6 சதவிதமாக மட்டுமே இருந்தது.

சென்னை குடிநீர் வாரியத்திடம் மொத்தம் 857 எம்எல்டி திறன் கொண்ட 20 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இதில் பல்வேறு காரணங்களால் 763 எம்எல்டி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும், 64 எம்எல்டி திறன் கொண்ட புதிய நிலையங்கள் கட்டுமானத்தில் உள்ளன.

சென்னை மாநகராட்சி நாளொன்றுக்கு சுமார் 900 எம்எல்டி கழிவுநீர் உற்பத்தியாகிறது. ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் இதற்கான சேகரிப்பு நிலையங்கள் அமைக்க நெசப்பாக்கத்தில் 4 முக்கிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Source link