காத்மாண்டு: நேபாளத்தில் நடந்த பொதுத்தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

காத்மாண்டு: நேபாளத்தில் நடந்த பொதுத்தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ராப் பாடகர் பாலென் ஷாவின் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. நேபாளத்தில் கடந்தாண்டு செப்டம்பரில் நடந்த இளம் தலைமுறையினரின் போராட்டத்தால், அப்போதைய பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார். இதையடுத்து, அங்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்க்கி தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது.

கடும் அரசியல் குழப்பத்திற்கு மத்தியில், 275 இடங்களைக் கொண்ட நேபாளத்தில் நேற்று (மார்ச் 5) பொதுத்தேர்தல் நடந்தது. மொத்தம் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் உள்ள 275 இடங்களில் 165 இடங்களுக்கு நேரடித் தேர்தல் மூலமாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

காத்மாண்டு முன்னாள் மேயரான பாலெனை ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. அதேபோல, ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சியின் பிரதமர் வேட்பாளராக கே.பி.சர்மா ஒலியே அறிவிக்கப்பட்டார்.

இன்று காலை முதல் நேரடி தேர்தல் நடந்த 165 தொகுதிகளுக்கான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பிரதமர் வேட்பாளர் பாலென் ஷாவின் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி 50க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. கே.பி.சர்மா தலைமையிலான கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன.

இதன்மூலம், மன்னராட்சியை ஆதரிக்கும் பாலென் ஷாவின் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

யார் இந்த பாலென் ஷா?

35 வயதான பாலேந்திர ஷா ஒரு கட்டுமான இன்ஜினியர். இவர், ராப் பாடகரும், காத்மாண்டுவின் முன்னாள் மேயரும் ஆவார். இவரை மக்கள் பாலென் என்று அழைத்து வருகின்றனர்.

ராப் பாடகர்களான டுபாக் ஷகூர் மற்றும் 50 சென்ட் ஆகியோரால் ஈர்க்கப்பட்டு, ராப் பாடகராக மக்களிடைய பிரபலமானார். அதன் பின்னரே, 2022ல் காத்மாண்டு மேயர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது நேபாளத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக அவர் உருவெடுத்துள்ளார். நேபாள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கடந்த ஜனவரி மாதம் அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி மற்றும் பாரம்பரிய அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவது போன்ற வாக்குறுதிகளின் மூலம் இளைஞர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளார்.

Source link