கோல்கட்டா: ‘வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் பகுதியில் இடையூறு ஏற்படுத்துவது, சர்வதேச எரிசக்தி பாதுகாப்பு பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை நேரடியாகப் பாதிக்கும்,’ என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த கடல்சார் மாநாட்டில் அவர் பேசியதாவது; உலகில் உள்ள கடல்கள் தற்போது வெறும் வர்த்தகப் பாதைகளாக மட்டுமல்லாமல், அவை ராஜதந்திர அதிகார மையங்களாக மாறி விட்டன. சர்வதேச விதிகள் ஒரு பெரிய மாற்றத்தை சந்தித்து வருகின்றன. அதேபோல, புவிசார் அரசியல் கட்டமைப்புகள் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. பழங்கால சர்வதேச கட்டமைப்புகள் நிலைகுலைந்து வருவதால், ஒவ்வொரு நாடும் தங்களின் உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
மேற்காசியாவில் நிலவும் தற்போதைய சூழல், உலகளாவிய ஸ்திரமற்ற தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அசாதாரணமானது. எனவே, அங்கு சூழல் எவ்வாறு மாறும் என்பதை கணிப்பது கடினம். வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் , சர்வதேச எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய பகுதியாகும். தற்போது, அந்தப் பகுதியில் இடையூறு ஏற்படும் போது, சர்வதேச எரிசக்தி பாதுகாப்பு பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை நேரடியாகப் பாதிக்கும்.
நிலம், நீர், வானம் மற்றும் விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் நாடுகளுக்கிடையே போட்டி அதிகரித்து வருவது கவலைக்குரியது. இந்த அசாதாரணமான சூழலே தற்போது இயல்பான ஒன்றாக மாறி வருவதுதான் மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது, எனக் கூறினார்.
