சென்னை: தவெக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் வரும் 6 ம்தேதி துவங்குகிறது என அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபைக்கு இன்னும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக அதே கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. அதிமுக பாஜ, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காணகிறது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்து போட்டியிடுகிறது.
சட்டசபை தேர்தலை முதல்முறையாக எதிர்கொள்ளும் தவெகவும் தனித்து போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால், அனைத்து பிரதான கட்சிகளும் வேட்பாளர்களை பட்டியலை முன்பே இறுதி செய்துவைத்துள்ளதாக கூறப்படுகிறது. தேதி வெளியான பின்னர் அந்த பட்டியலை அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தவெக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக விருப்ப மனுக்களை பெறுவதற்கான தேதியை அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தவெக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். விருப்ப மனுக்கள், வரும் பிப்.,06 முதல் பிப்.,14 வரை தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன. பிப்ரவரி 6ஆம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். மற்ற நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
