ராஜ்யசபாவின் அடுத்த துணைத் தலைவர் யார்?

நமது நிருபர்

ராஜ்யசபாவின் தற்போதைய துணைத் தலைவராக உள்ள ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 9ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த துணைத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராஜ்யசபாவின் தற்போதைய துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங். இவர் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி முதல் இந்தப் பதவியில் நீடித்து வருகிறார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர், பீஹார் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவரது பதவி காலம் வரும் ஏப்ரல் 9ம் தேதி நிறைவடைகிறது. இவருக்குப் பிறகு யார் புதிய துணை தலைவராக நியமன செய்யப்படுவார், அரசு அந்தப் பதவியை நிரப்புமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் மூன்று வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது.

ஒன்று பாஜ அந்த இடத்தை தனக்காகவே வைத்துக் கொள்ளலாம். இரண்டு, ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியை மீண்டும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு வழங்கலாம். மூன்றாவது தெலுங்கு தேசம் கட்சி அல்லது அதிமுகவிற்கு வழங்க வாய்ப்பு இருக்கிறது. அதிமுகவில் எம்பியாக தேர்வு செய்யப்படவுள்ள தம்பிதுரைக்கு வழங்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே தம்பிதுரை லோக்சபாவின் துணை சபாநாயகராக பதவி வகித்த அனுபவம் கொண்டவர்.

இதற்கிடையே லோக்சபாவை போலவே ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு செய்யலாம் என பேசப்படுகிறது. காரணம், 2019ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் லோக்சபாவின் துணை சபாநாயகர் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. தற்போது லோக்சபாவை மூத்த எம்பிக்கள் சபாநாயகர் இல்லாத போது வழிநடத்தி வருவதைப் போலயே, ராஜ்யசபாவிலும் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மூத்த எம்பிக்கள் உதவியாக இருக்கலாம்.

ராஜ்யசபாவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு இரண்டு எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். ஏற்கனவே லோக்சபாவில் சபாநாயகர் பதவி வழங்கப்பட்ட போது தெலுங்கு தேசம் கட்சி எந்த ஆர்வமும் காட்டவில்லை. ராஜ்யசபாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு நான்கு எம்பிக்கள் உள்ளனர். அவர்கள் எளிதாக மீண்டும் துணைத்தலைவர் பதவியை கைப்பற்றலாம்.

இந்த முடிவை மத்திய அரசு ஏற்க தயாராக இருக்கிறதா என்று இதுவரை எந்த முடிவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ராஜ்யசபா தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் தம்பிதுரைக்கு துணைத் தலைவர் பதவி வழங்க குறைவாகவே வாய்ப்பு இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து இருக்கின்றனர்.

துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டாம் என்று அரசு முடிவு செய்ய அதிக சாத்தியம் இருக்கிறது என்றும் பல்வேறு தரப்பினர் ஒப்பு கொண்டுள்ளனர். துணைத் தலைவர் நியமிக்கப்படவில்லை என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எம்பிக்கள் பலம் 120ஐ தாண்டி உள்ளது என்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

ராஜ்யசபாவின் அடுத்த துணைத் தலைவராக யாரை நியமனம் செய்ய வாய்ப்புள்ளது என்ற உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!

Source link