பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியை மீண்டும் முன்னெடுத்துள்ள கர்நாடக அரசு, அணையை கட்டுவது தொடர்பாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, முதல்வர் சித்தராமையா நேற்று சட்டசபையில் வெளியிட்டார். அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக, தோழமை கட்சியுடன் முதல்வர் ஸ்டாலின் பேசாதது ஏன் என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரச்னை நீடித்து வருகிறது. மழைக் காலங்களில் உபரியாக வரும் நீரை காவிரியில் திறந்து விட்டு, தமிழகத்திற்கான பங்கீட்டை அளவுக்கு அதிகமாக வழங்கி விட்டதாக ஒவ்வொரு முறையும் கர்நாடக அரசு கூறி வருகிறது.
திட்ட அறிக்கை
இந்த சூழலில், பெங்களூரு அருகே ராம்நகர் மாவட்டத்தில் மேகதாது பகுதியில், 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி எடுத்து வருகிறது.
பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தல் மற்றும் 400 மெகாவாட் மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்டவற்றுக்காக, இந்த திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான திட்ட அறிக்கையை, மத்திய நீர்வள ஆணையத்திடம், 2018ல் சமர்ப்பித்திருந்தது. மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு குறையும் என்றும், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றும் கூறி, அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
திட்ட அறிக்கையை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்த போது, புதுச்சேரி, கேரள அரசுகளும் திட்ட அறிக்கைக்கு அனுமதி தரக்கூடாது என போர்க்கொடி உயர்த்தின. இந்தச் சூழலில், தமிழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு கடந்தாண்டு நவம்பரில் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான உத்தரவில், ‘மேகதாது அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையின் மீது, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவை முன்வைக்கும் கருத்துகள் மற்றும் பரிசீலனைகளின் அடிப்படையில் தான், மத்திய நீர்வள ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தது.
விரைவில் சமர்பிப்பு
மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் கர்நாடக அரசும் மவுனம் சாதித்து வந்தது. இந்நிலையில், அணை கட்டும் முயற்சியை அம்மாநில அரசு மீண்டும் முன்னெடுத்துள்ளது. கர்நாடக சட்டசபையில், 2026 – 27ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநில முதல்வர் சித்தராமையா நேற்று தாக்கல் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
மாநிலத்தில் உள்ள பல்வேறு நதி படுகைகளில் பாசன கட்டமைப்பை வலுப்படுத்துதல், தண்ணீர் பற்றாக்குறையை போக்குதல் மற்றும் குடிநீர் வினியோகத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு, பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நம் மாநிலத்தின் முதன்மை திட்டமான மேகதாது அணை திட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இது, நமக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி.
இந்த தீர்ப்பின் அடிப்படையில், திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை மற்றும் வனத்துறை அனுமதி கோரும் முன்மொழிவு போன்றவை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
