புதுடில்லி: “நியூயார்க் மேயரையே தேர்ந்தெடுக்க முடியாத டிரம்ப், ஈரான் உச்ச தலைவரை தேர்ந்தெடுப்பதில் பங்கு வேண்டும் என துடிப்பது வேடிக்கை யாக இருக்கிறது,” என, டில்லி உரையாடலில் ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் கிண்டல் அடித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி சமீபத்தில் கொல்லப்பட்டார். இதையடுத்து, ஈரானுக்கு டிரம்ப் ஒரு கோரிக்கை விடுத்திருந்தார்.
வேடிக்கை
அதில், ‘தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் மாற்றத்தில் அமெரிக்காவின் பங்கு இருந்தது போலவே, ஈரானின் உச்ச தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் அமெரிக்காவின் பங்கு இருக்க வேண்டும்’ என, டிரம்ப் வலியுறுத்தினார்.
இது குறித்து, டில்லியில் நடந்து வரும், ‘ரெய்சினா’ உரையாடலில் பங்கேற்ற ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் சையத் கத்தீப்சாதே நேற்று கூறியதாவது:
ஈரான் உச்ச தலைவரை தேர்ந்தெடுக்க துடிக்கும் டிரம்பால், தன் நாட்டில் உள்ள நியூயார்க் மேயரை கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை. அப்படியிருக்கையில் டிரம்பின் பேச்சு வேடிக்கையாக உள்ளது.
இது, இஸ்ரேல் உடனான போர் என்பது சவுதி அரேபியா முதல் ஓமன் வரை அனைவருக்கும் தெரியும். இஸ்ரேலியர்கள் இந்த போருக்குள் அமெரிக்கர்களை இழுத்துவிட்டுள்ளனர். இதை எதிர்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் போராடுவோம். இந்த பகுதிகளில், அமெரிக்காவின் இருப்பை முழுமையாக அகற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நாடுகளுக்கு இடையே பிரச்னை இருக்கும் போது, ஒரு நாட்டின் தலைவரை குறிவைப்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்று.
முன்னுதாரணம்
இதுவே புதிய நடைமுறையாக மாறினால், அது உலகத்துக்கே ஆபத்தானது. ஒரு நாடு மற்றொரு நாட்டின் தலைவரை படுகொலை செய்வது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கும்.
ஈரானால் அச்சுறுத்தல் என்று கூறுகின்றனர். வளைகுடாவில் உள்ள அமெரிக்க ரேடார்கள் என்ன அங்கு மீன் பிடிப்பதற்காகவா வைக்கப்பட்டுள்ளன?
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்ந்து விமர்சித்து வரும் அந்நாட்டின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சோரம் மம்தானி, டிரம்பின் எதிர்ப்பை மீறி, நியூயார்க் மேயராக சமீபத்தில் தேர்வானார். அதை தான் ஈரான் அமைச்சர் விமர்சித்தார்.
