தென்காசி: “தமிழகத்தில், பிரதமர் மோடியை, ஆங்கிலத்தில் பேச வைத்தது தான் திராவிட மாடல்,” என துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம் இலஞ்சியில், தி.மு.க., அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:
மத்திய பட்ஜெட், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே, அவசரமாக பட்ஜெட்டை பாராட்டி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். அந்த அளவிற்கு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு முரட்டு அடிமையாக அவர் இருக்கிறார்.
இதுவரை, தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்தபோதெல்லாம், பொதுக்கூட்டங்களில் ஹிந்தியில் மட்டுமே பேசினார். அதை, தமிழில் தப்புத்தப்பாக மொழி பெயர்த்தனர். ஆனால், கடந்த வாரம் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில், முதல் முறையாக ஆங்கிலத்தில் மோடி பேசினார்.
இது திராவிட மாடல் ஆட்சியின், இருமொழிக் கொள்கையின் வெற்றி. பிரதமர் மோடியையே ஆங்கிலத்தில் பேச வைத்தது திராவிட மாடல் ஆட்சிதான். மதுரை நிகழ்ச்சி மேடை முகப்பில் ஈ.வெ.ரா., படம் இருந்தது. அதை அகற்றுமாறு, பா.ஜ.,வினர் கூறியதும், அகற்றிவிட்டு, மோடி படத்தை வைத்தார் பழனிசாமி.
இதன் வாயிலாக, அவர் எந்த அளவிற்கு அடிமைத்தனமாக நடந்து கொள்கிறார் என்பது தெரிகிறது. இப்படியே சென்றால் மோடி, அமித் ஷா கூறினால் அ.தி.மு.க., என்ற பெயரை கூட, ‘அமித் ஷா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று மாற்றினாலும் ஏற்றுக் கொள்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.
