சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு வெளியீடு: மதுரை ராஜேஸ்வரி சுவீ இரண்டாமிடம்

சென்னை: சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவீ, தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நம் நாட்டில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., – ஐ.எப்.எஸ்., – ஐ.ஆர்.எஸ்., உட்பட 23 சிவில் சர்வீசஸ் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

முதல்நிலை, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என, மூன்று நிலைகளாக இத்தேர்வுகள் நடத்தப் படுகின்றன.

அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு, கடந்த ஆண்டு ஜன., 22ம் தேதி வெளியிடப்பட்டது. சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு, 79 நகரங்களில், 2025 மே 25ம் தேதி நடந்தது; 7 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.

முதல்நிலை தேர்வு முடிவு, கடந்த ஜூன் 11ம் தேதி வெளியானது. முதல்நிலை தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த 723 பேர் உட்பட, 14,156 தேர்ச்சி பெற்றனர்.

அதைத்தொடர்ந்து, சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு, கடந்த ஆகஸ்ட் 22 முதல் 31ம் தேதி வரை நடந்தது. முதன்மை தேர்வு முடிவு, நவ., 11ம் தேதி வெளியானது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த 155 பேர் உட்பட, 2,756 பேர், நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். நேர்முகத் தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.

தற்போது, ஐ.ஏ.எஸ்.,

தொடர்ச்சி 11ம் பக்கம்

பதவிக்கு – 180, ஐ.எப்.எஸ்., – 55, ஐ.பி.எஸ்., – 150, ‘குரூப் ஏ’ பதவிக்கு – 507, ‘குரூப் பி’ – 195 என, மொத்தம் 1,087 காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில், நேர்முகத் தேர்வு அடிப்படையில், 958 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதற்கான முடிவுகள் நேற்று வெளியாகின.

அதில், ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தை சேர்ந்த அனுஜ் அக்னிஹோத்ரி, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மருத்துவரான இவர், எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., முடித்துள்ளார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவீ, தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சண்டிகரைச் சேர்ந்த அகான்ஷ் துல், தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முகைதீன், தேசிய அளவில் ஏழாம் இடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில்

60 பேர் தேர்ச்சி

சிவில் சர்வீசஸ் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வை தமிழில் எழுதி, அருண் குமார் 585வது இடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 60 பேரில், 56 பேர், தமிழக அரசின், ‘நான் முதல்வன்’ ஊக்கத் தொகை பயிற்சி திட்டத்தில் பயன் பெற்றிருப்பதாக, திறன் மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. அதில் 39 பேர், ‘நான் முதல்வன்’ மற்றும் அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையம் இணைந்து நடத்திய உறைவிட பயிற்சி திட்டத்தில் பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது முயற்சி!

மதுரை, நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் முருகதாஸ்; வாடிப்பட்டியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்துகிறார். இவரது மனைவி நாகராணி; வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி இணை பேராசிரியை. இந்த தம்பதியின் மகள் ராஜேஸ்வரி சுவீ, 28. யு.பி.எஸ்.சி., தேர்வில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ராஜேஸ்வரி சுவீ கூறியதாவது: இது ஆறாண்டு பயணம். ஐந்தாவது முயற்சியில் பெற்றோர் மற்றும் கடவுளின் ஆசியால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. ஏற்கனவே, குரூப் – 1 தேர்வில் தேர்ச்சி அடைந்து திண்டுக்கல்லில் சப் – கலெக்டர் பயிற்சியில் இருந்தேன். இரண்டு மாதங்களாக சென்னை தலைமைச் செயலகத்தில் பணியில் இருக்கிறேன். யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சிக்கு, தமிழக அரசின், ‘நான் முதல்வன்’ திட்டம் மிகவும் உதவியாக இருந்தது. அதிக போட்டித் தேர்வுகளை நடத்தினர். இந்த திட்டத்தில் மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை, எளிய குடும்பத்திலிருந்து வருபவர்களுக்கு பெரிய இலக்கை அடைய உதவியாக இருக்கிறது. போட்டித்தேர்வுக்கு பயிற்சி எடுப்பவர்கள் கடின உழைப்பு, தன்னம்பிக்கையுடன் திசை மாறாமல் படித்தால் கண்டிப்பாக சாதிக்கலாம். மனம் தளரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயி மகள் அசத்தல்

கோவை மாவட்டம் அன்னுார் அருகே கீழ்க்கதவுக்கரை, கோழிப்பண்ணை தோட்ட விவசாயி சந்திரசேகர் – மோதிலா தம்பதியின் இளைய மகள் சத்யப்ரியா. விவசாயத்தில் பி.எஸ்சி., பட்டம் பெற்றவர். சிவில் சர்வீசஸ் தேர்வு வெற்றி குறித்து சத்யப்ரியா கூறுகையில், “முதல்நிலை தேர்வு இரண்டு முறை எழுதினேன். மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளேன். சென்னையில் நான் படித்த அகாடமியில் ஏராளமான மாதிரி தேர்வுகளை நடத்தினர். நாளிதழ்கள் மற்றும் என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள், நான் தேர்ச்சி பெற மிகவும் உதவியாக இருந்தன,” என்றார்.

Source link