வாஷிங்டன்: மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், ”ஈரானுக்கு எதிராக குர்து படையினர் தாக்குதல் நடத்தினால் ஆதரிப்போம்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி ஈரான் மீது, பிப்., 28ல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
புதிய உச்ச தலைவராக அவரது மகன் மோஜ்தாபா கமேனி பொறுப்பேற்க உள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு அழுத்தம் தரும் வகையில், அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
கத்தாரில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ தளம், ‘அல் உடெய்த்’. இதன் மீது ஈரான் நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கத்தார் அதிகாரிகள் கூறினர்.
மேலும், இஸ்ரேலில் உள்ள ராமத் டேவிட் விமான தளம், குவைத்தில் உள்ள அமெரிக்க படைகள் முகாம் மற்றும் வடக்கு ஈராக்கின் எர்பில் பகுதியில் உள்ள அமெரிக்க தளம் ஆகிய இடங்களும் தாக்கப் பட்டன.
இந்நிலையில், வடக்கு ஈராக்கில் உள்ள ஆயிரக்கணக்கான குர்து படையினர் ஈரானுக்குள் நுழைய தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர். இ தற்காக அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்த்து உள்ளனர்.
அதிபர் டிரம்ப் மற்றும் ஈராக்கின் முக்கிய குர்து கட்சி தலைவர்களிடையே இது தொடர்பாக ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து செய்தி நிறுவன ம் ஒன்றுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ”ஈராக் எல்லை வழியாக ஈரானுக்குள் நுழைந்து, அந்நாட்டு பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நடத்த குர்து படைகள் முன்வந்தால், அதற்கு முழு ஆதரவு அளிப்பேன்,” என்றார்.
