கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் நடக்கிறது. 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன. நேற்று ‘ஏ’ பிரிவு லீக் போட்டிகள் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்தன. ஆஸ்திரேலியா அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வென்றது. ஆஸ்திரேலிய தரப்பில் அமி சேயர் (8 வது நிமிடம்), மேரி (27), அலான்னா (35, 58) கோல் அடித்தனர்.
மற்றொரு போட்டியில் தென் கொரிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் பிலிப்பைன்சை வீழ்த்தியது. தென் கொரியா சார்பில் சோ ரி (37), கிம் ரி (59), கோ யூ ஜின் (75) கோல் அடித்தனர்.
மீண்டும் வருகிறார் செரினா
புதுடில்லி: அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 44. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 23 பட்டம் வென்றுள்ளார். 2022, யு.எஸ்., ஓபன் தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. வரும் விம்பிள்டன் டென்னிசில் இருந்து, மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கிராண்ட்லாம் அரங்கில் 24 பட்டம் வென்ற செர்பிய வீரர் ஜோகோவிச் கூறுகையில்,” செரினா மீண்டும் விளையாடப் போகிறார் என நினைக்கிறேன். சகோதரி வீனசுடன் இணைந்து இரட்டையர் போட்டிகளில் பங்கேற்கலாம்,” என்றார்.
எக்ஸ்டிராஸ்
* ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு பகலிரவு டெஸ்டில் பங்கேற்கிறது. இப்போட்டி பெர்த்தில் இன்று துவங்குகிறது. இது, பெண்கள் கிரிக்கெட்டில் நடக்கவுள்ள 4வது பகலிரவு டெஸ்ட்.
* கோல்கட்டாவில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், கோவா அணிகள் மோதின. இப்போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.
* ஆஸ்திரேலியாவின் லான்செஸ்டன் நகரில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி 7-5, 6-3 என சீனாவின் ரூயன் ஜாங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
* ஆமதாபாத்தில், வரும் நவம்பர் மாதம் இந்திய சைக்கிள் பந்தய லீக் முதல் சீசன் நடக்கவுள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
* தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், வரும் மார்ச் 8-15ல் உலக குத்துச்சண்டை பியூட்சர்ஸ் கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதற்காக, அமன் சிவாச், பிராச்சி, சந்திரிகா, ஜாய்ஸ்ரீ, சாஹில் துஹான், உத்தம் சிங் ராகவ் உள்ளிட்டோர் அடங்கிய 10 பேர் கொண்ட இந்திய அணி பாங்காங் சென்றது.
* ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கான இலங்கை சென்ற பாகிஸ்தான் அணியினர், கண்டியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர். அப்போது, பெயர் தெரிவிக்கப்படாத பாகிஸ்தான் வீரர், ஓட்டல் அறைகளை சுத்தம் செய்யும் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதற்காக பாகிஸ்தான் அணி மானேஜர் நவீது சீமா, மன்னிப்பு கேட்டார். தற்போது அந்த வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தவிர ஒழுங்கு நடவடிக்கையும் இவர் மீது எடுக்கப்பட உள்ளது.
