சென்னை: “இளைஞர்கள் மத்தியில் திரைப்பட மோகம் அதிகமாக இருப்பதற்கு ஆட்சியாளர்களே காரணம்,” என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தலில், நா.த.க., தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் மாற்றமில்லை.
என்னோடு யாரும் கூட்டணிக்கு வர மாட்டார்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்காத அரசியல் பண்பாட்டை ஏற்கும் கட்சிகள் வந்தால் மட்டுமே, கூட்டணி பற்றி சிந்திக்க முடியும். காசு கொடுத்து பெறும் வெற்றி என்பது இழிவான அரசியல்.
த.வெ.க., தலைவர் விஜய், கரூர் செல்லவில்லை என்றால் கூட்டம் கூடியிருக்காது; உயிரிழப்பும் நடந்திருக்காது. தற்போது, ‘கரூர் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை’ என, விஜய் கூறுவதை ஏற்க முடியாது.
தெரியாமல் நடந்து விட்டது. அதற்கு நானும் பொறுப்பாகி விட்டேன் என, மன்னிப்பு கேட்டிருந்தால் முடிந்திருக்கும். இன்றைய இளைஞர்களிடம், அரசியல் அறிவை விட திரைப்பட மோகம் அதிகமாக இருப்பதற்கு ஆட்சியாளர்களே காரணம்.
கல்வி நிறுவனங்களில் அரசியல் பேச தடை விதித்து விட்டு, சினிமா நட்சத்திரங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பது சமூக சீர்கேடு.
மாநில உரிமை பேசும் தி.மு.க., அந்த மாநில உரிமையை பறித்த காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
