புதுடில்லி: ” நமது அண்டை நாடுகள், அமெரிக்கா உடன் போட்டி போடும் நாடுகளை விட இந்தியா பெற்ற வர்த்தக ஒப்பந்தம் சிறந்தது. இந்த ஒப்பந்தத்தில் விவசாயிகள் மற்றும் பால்வளத்துறை நலன் உறுதி செய்யப்பட்டு உள்ளது,” என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக நேற்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டன.
அவமதிப்பு
இது தொடர்பாக டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: இது குறித்து பார்லிமென்டில் பேச விரும்பினோம். ஆனால், பார்லிமென்டில் இன்று நாம் நடந்த அவமானகரமான காட்சியை பார்த்தோம். ராகுல் தலைமையில் காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சிகளான திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகியன பார்லிமென்ட்டை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டன.
சபாநாயகர் இருக்கையை நெருங்கியதுடன் அவரை அவமானப்படுத்தினர். ராகுலுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களால் தான் ஒப்பந்தம் குறித்து பார்லிமென்டில் பேசாமல், இங்கு வந்து பேசுகிறோம்.
சிறந்தது
அதிபர் டிரம்ப் உடன் தனக்கு இருந்த நெருங்கிய உறவு மற்றும் நட்பை பயன்படுத்தி வர்த்தக ஒப்பந்தத்தை பிரதமர் மோடி இறுதி செய்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நமது அண்டை நாடுகள், சுற்றி உள்ள நாடுகள், அமெரிக்கா உடன் போட்டியிடும் நாடுகள் பெற்றுள்ள ஒப்பந்தத்தை விட இந்தியா பெற்றுள்ளது மிகச் சிறப்பான ஒப்பந்தம் ஆகும். நம் அனைவருக்கும் சிறந்த ஒப்பந்தம் இது.
விவசாயிகள் நலன்
அனைவர் சார்பாக நான் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி உறுதி செய்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய பொருளாதாரம், 140 கோடி மக்கள், ஏழைகள் விவசாயிகள், மீனவர்கள், கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள், சகோதரிகள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகும்.
கால்நடை வளர்ப்பவர்கள், விவசாயம் மற்றும் பால்வளத்துறையின் நலனை பிரதமர் மோடி கவனத்தில் கொண்டுள்ளார். வர்த்தக ஒப்பந்தத்திலும், விவசாயம் மற்றும் பால்வளத்துறை நலனை இந்தியா உறுதிப்படுத்தி உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் எதிர்காலத்துக்கு கட்டியம் கூறுவதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
