நட்சத்திரங்களின் வெயிட் லாஸ் மருந்து! மேஜிக் செய்யுமா… பாதிப்பை ஏற்படுத்துமா?

சமீபகாலமாக உலகெங்கிலும் உள்ள ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் ‘ஓஸெம்பிக்’ (Ozempic). ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை பலரது உடல் எடை மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் இந்த மருந்து, மருத்துவ உலகில் பெரும் புரட்சியையும், கூடவே பல விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்

அடிப்படையில் டைப் 2 நீரிழிவு நோய்க்காக (Type 2 Diabetes) உருவாக்கப்பட்ட இந்த மருந்து, இன்று உலகளாவிய அளவில் ‘எடைக்குறைப்பு மந்திரமாக’ (Weight-loss miracle) பார்க்கப்படுகிறது.  சர்க்கரை நோய் மருந்து எப்படி உடல் எடையைக் குறைக்கிறது… இதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன… மற்றும் மருத்துவரின் ஆலோசனையின்றி இதைப் பயன்படுத்துவதில் உள்ள விபரீதங்கள் என்னென்ன?

எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவான விளக்கங்களைத் தருகிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.

அதென்ன ஓஸெம்பிக்?

ஓஸெம்பிக் என்பது ஒரு மருந்தின் பிராண்ட் பெயர். இது ஊசி (Injection) வடிவில் கிடைக்கிறது.  இதில் ‘செமாக்ளுடைடு’ (Semaglutide) என்ற மூலக்கூறு (Molecule) உள்ளது. இந்த மூலக்கூறு, நம் உடலில் இயற்கையாகச் சுரக்கும் GLP-1 (Glucagon-like peptide-1) என்ற ஹார்மோனைப் போன்றே செயல்படும். இது நம் செரிமான மண்டலத்தில் சுரக்கும் CCK மற்றும் Peptide YY போன்ற குடல் ஹார்மோன்களின் (Gut hormones) வேலைகளையும் சேர்த்துச் செய்கிறது.

நாம் போதுமான அளவு சாப்பிட்ட பிறகு, உடல் இயற்கையாகவே GLP-1 ஹார்மோனைச் சுரந்து ‘வயிறு நிறைந்துவிட்டது’ என்ற சிக்னலை மூளைக்கு அனுப்பும்.

பொதுவாக, நம் உடலில் கெர்லின் (Ghrelin) என்ற ஹார்மோன் சுரக்கும்போதுதான் நமக்குத் தீவிரமான பசி உணர்வு ஏற்படும். நாம் போதுமான அளவு சாப்பிட்ட பிறகு, உடல் இயற்கையாகவே GLP-1 ஹார்மோனைச் சுரந்து ‘வயிறு நிறைந்துவிட்டது’ என்ற சிக்னலை மூளைக்கு அனுப்பும். ஓஸெம்பிக் மருந்து இந்தச் செயல்பாட்டைத் தூண்டி, நமக்குத் தேவையற்ற பசி உணர்வைத் தடுக்கிறது.
இந்த மருந்து இரைப்பையின் இயக்கத்தை (Motility) மெதுவாக்குகிறது. மருத்துவரீதியாக இதை ‘கேஸ்ட்ரோபெரிசிஸ்’ (Gastroparesis) என்று சொல்வோம். அதாவது, நீங்கள் சாப்பிடும் உணவு, இரைப்பையை விட்டு மிக மெதுவாகவே நகரும். இதன் காரணமாக, மிகக் குறைந்த அளவு உணவைச் சாப்பிட்டாலே வயிறு நீண்ட நேரம் நிறைந்திருப்பது போன்ற உணர்வு (Fullness) ஏற்படும்.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

உணவுக் கட்டுப்பாடு (Diet control) மற்றும் உடற்பயிற்சி (Exercise) மூலமும் உடல் எடையைக் குறைக்க முடியாமல் தவிப்பவர்களுக்கு, இந்த ஊசி  சிறந்த தீர்வாக அமைகிறது. குறிப்பாக, அதீத உடல் பருமன் (Obesity) காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படுபவர்களுக்கு, பசியைக் கட்டுப்படுத்தி உணவைக் குறைப்பதன் மூலம் எடையைக் குறைக்க இது பரிந்துரைக்கப்படுகிறது. 

உடல் பருமனால் ஏற்படும் டைப் 2 வகை சர்க்கரை நோயாளிகளுக்கு இது இரட்டிப்புப் பலன் தருகிறது.  குறைவான உணவை உட்கொள்ளும்போது, உடலில் இயற்கையாகச் சுரக்கும் இன்சுலின் அளவே ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இருக்கும். உடல் எடை கணிசமாகக் குறையும் போது, சர்க்கரை நோயை 90 முதல் 100 சதவிகிதம் வரை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். சிலருக்கு  சர்க்கரை நோய்க்கான மற்ற மருந்துகளின் தேவையே இல்லாமல் போகும் வாய்ப்பும் உண்டு. 

இவை தவிர, செமாக்ளுடைடு மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு சர்வதேச மருத்துவ அமைப்புகள்,  குறிப்பிட்ட பி.எம்.ஐ (BMI – Body Mass Index) வரம்புகளை நிர்ணயித்துள்ளன.

ஒருவருக்கு டைப் 2 வகை சர்க்கரை நோய் (Type 2 Diabetes) இருந்து, அவரது பி.எம்.ஐ அளவு 27.5-க்கு மேல் இருந்தால், உடல் எடையைக் குறைப்பதன் மூலம் சர்க்கரையைக் கட்டுப்படுத்த இந்த மருந்து பரிந்துரைக்கப்படலாம்.

ஒருவருக்கு  டைப் 2 சர்க்கரை நோய் (Type 2 Diabetes) இருந்து, அவரது பி.எம்.ஐ அளவு 27.5-க்கு மேல் இருந்தால், உடல் எடையைக் குறைப்பதன் மூலம் சர்க்கரையைக் கட்டுப்படுத்த இந்த மருந்து பரிந்துரைக்கப்படலாம்.
சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும், ஒருவரது பி.எம்.ஐ அளவு 30-க்கு மேல் இருந்தால் (Obesity), அவர் உடல் எடையைக் குறைக்க இந்த ஊசியைப் பயன்படுத்தலாம்.
பொதுவாக, ஒரு நபர் தனது உயரத்திற்கு ஏற்ற எடையைவிட சுமார் 25 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட கூடுதல் உடல் எடை கொண்டிருக்கும் பட்சத்தில், இந்த மருத்துவச் சிகிச்சை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

யார் பரிந்துரைக்கலாம்?
எல்லா மருத்துவர்களும் ஓஸெம்பிக் மருந்தைப்  பரிந்துரைக்க முடியாது. எண்டோகிரைனாலஜிஸ்ட் (Endocrinologist) எனப்படும் நாளமில்லா சுரப்பியல் மருத்துவர் அல்லது எம்டி (MD) முடித்த பொது மருத்துவர் (General Physician), அல்லது உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை நிபுணர் (Bariatric Surgeon) ஆகியோர் மட்டுமே இதனைப் பரிந்துரைக்க முடியும்.

எம்டி (MD) முடித்த பொது மருத்துவர் (General Physician), அல்லது உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை நிபுணர் (Bariatric Surgeon) ஆகியோர் மட்டுமே இதனைப் பரிந்துரைக்க முடியும்.

அங்கீகரிக்கப்பட்டவைதானா?

இந்த மருந்துகள் எல்லாம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO – Central Drugs Standard Control Organisation), அனைத்து ஆய்வுகளையும் (Studies) முறையாகப் பரிசீலித்துள்ளது. அந்த ஆய்வுகளுக்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட பின்னரே இவை இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. எனவே, செமாக்ளுடைடு (Semaglutide) மற்றும் டிர்செபடைடு (Tirzepatide) ஆகிய இரண்டு மருந்துகளுமே உடல் எடைக் குறைப்பிற்காக (Weight loss) இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள்தான்.

பக்க விளைவுகள் இருக்குமா?

மருத்துவர் பரிந்துரையின்றி எடுக்கும்போதும், மருத்துவர் பரிந்துரைத்த அளவை, வேளையை மாற்றி எடுக்கும்போதும் எந்த மருந்தும் பக்க விளைவுகளைக் கொடுக்கலாம். இந்த மருந்துக்கும் அது பொருந்தும். யாருக்கு, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற கணக்கு பின்பற்றப்பட வேண்டும். மருந்து எடுக்க ஆரம்பித்த பிறகும் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.

முதலில அசிடிட்டியை சரிசெய்ய வேண்டியது முக்கியம்.

உதாரணத்துக்கு, அசிடிட்டி பிரச்னை இருப்பவர்களுக்கு அதைச் சரிசெய்யாமல் இந்த மருந்தைக் கொடுக்கக்கூடாது. சிலருக்கு இந்த மருந்தைக் கொடுப்பதால் வாந்தி, அசிடிட்டி பிரச்னை வரலாம். எனவே, முதலில அசிடிட்டியை சரிசெய்ய வேண்டியது முக்கியம். இந்த மருந்தை எடுக்க ஆரம்பித்த பிறகு வயிற்றைக் காயப் போடக்கூடாது. நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்.

யாருக்குக் கொடுக்கக்கூடாது என்பதையும் கவனிக்க வேண்டும். உதாரணத்துக்கு, கிட்னி பிரச்னை உள்ளவர்களுக்கு வலி மாத்திரைகள் கொடுக்கக்கூடாது. அதே போலத்தான், இந்த மருந்தும். ஏற்கெனவே ஒருவருக்கு கணையத்தில் வீக்கம் இருந்தாலோ,  தொற்று இருந்தாலோ, மருத்துவ ஆலோசனையின்றி இந்த மருந்தைக் கொடுக்கக்கூடாது.

முகம் மாறுமா?

ஒருவர் உடல் எடை அதிகரிக்கும்போது அவருக்கு சருமம் விரிவடைய ஆரம்பிக்கும்.  அப்படியானால் எடை குறையக் குறைய, சருமம் சுருங்குமா என்றால் சுருங்காது. அதற்கு வயதும் ஒரு காரணம். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சருமத்தின் விரிவடையும் தன்மை மாறாது. எனவே, எடை குறையும்போது முகத்திலுள்ள தசைகள் நார்மலாக மாற வாய்ப்பில்லை. வெயிட்லாஸ் செய்தவர்களுக்கு முகம் தளர்ந்துபோய் காட்சியளிப்பதன் காரணம் இதுதான். இங்கே இந்த மருந்தை, உடல் பருமனுக்கான தீர்வாகவே பார்க்க வேண்டும். உடல் எடை குறைவதோடு, சர்க்கரைநோயும் கட்டுக்குள் வருவதால் பல பிரச்னைகள் தவிர்க்கப்படும். 

வெயிட்லாஸ் செய்தவர்களுக்கு முகம் தளர்ந்துபோய் காட்சியளிப்பதன் காரணம் இதுதான்.

நீண்டகாலம் எடுக்க வேண்டுமா?

இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும்வரை உணவை அளவோடு எடுத்துக்கொள்வோம்.  மருந்தை விட்டால் மறுபடி அந்தக் கட்டுப்பாடு இழக்கப்படும். உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் இல்லாதபோது மீண்டும் எடை கூடும். அதற்காகவே இந்த மருந்தை நீண்டகாலத்துக்கு எடுக்கச் சொல்லி அறிவுறுத்தப்படும். மற்றபடி, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி இரண்டும் பின்பற்றப்பட்டால், இந்த மருந்தை நிறுத்திய பிறகும், உடல் எடை ஒரே சீராக இருக்கும், அதிகரிக்காது” என்கிறார் டாக்டர் பாலமுருகன்.

Source link