‘Having a cross and a picture of Jesus at home does not mean one has become a Christian’-‘வீட்டில் சிலுவை, ஏசுநாதர் படம் இருக்கிறது என்பதற்காக கிறிஸ்தவராகிவிட்டார் என்று அர்த்தமாகாது’

மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவை சேர்ந்த பட்டியலின மாணவர் ஒருவர் தனக்கு பட்டியலின சாதிச்சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மாணவரின் முன்னோர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதால், அவருக்கு பட்டியலின சான்றிதழ் பெறத் தகுதியில்லை என்று அகோலா சாதி சரிபார்ப்புக் குழு முடிவு செய்திருந்தது.

விண்ணப்பத்தாரரின் வீட்டில் சிலுவை மற்றும் கிறிஸ்து படங்கள் இருப்பு மற்றும் 1962-ஆம் ஆண்டு பள்ளிப் பதிவேட்டில் அவரது குடும்பம் கிறிஸ்துவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை ஆதாரமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மனுதாரர் தனது மனுவில், “‘தனது குடும்பம் முறையாக ஒருபோதும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. சாதிப் பாகுபாட்டைத் தவிர்ப்பதற்காகவே தனது தாத்தா பள்ளிப் பதிவேடுகளில் கிறிஸ்துவர் என்று குறிப்பிட்டுக்கொண்டார் என்றும், உண்மையில் மதமாற்றம் ஏதும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், தனது வாதத்திற்கு ஆதாரமாக பள்ளி மற்றும் அரசு ஆவணங்களையும், தனது உறவினர் ஒருவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சாதி உறுதிச் சான்றிதழையும் அவர் சமர்ப்பித்தார்.

இம்மனு நீதிபதிகள் முகுலிகா ஜவால்கர் மற்றும் நந்தேஷ் தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது ஆதாரங்களை ஆய்வு செய்த உயர் நீதிமன்றம், மாவட்ட அதிகாரிகளின் முடிவு சரியானது அல்ல என்று கண்டறிந்தது. மேலும் அகோலா சாதி சரிபார்ப்புக் குழுவின் முடிவை தவறானது மற்றும் பிழையானது என்று தெரிவித்த நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்தது.

மேலும், மனுதாரருக்கு பட்டியலின சான்றிதழை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஒருவரது வீட்டில் இருக்கும் மத அடையாளங்களை வைத்து மட்டுமே மதமாற்றத்தை உறுதி செய்ய முடியாது என்றும், மதமாற்றத்திற்கு உறுதியான ஆவண ஆதாரங்கள் அவசியம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்,”மதமாற்றம் குறித்த எந்தவொரு குற்றச்சாட்டும் ஞானஸ்நான சடங்குகள் (baptism rituals) அல்லது ஞானஸ்நானச் சான்றிதழ் போன்ற ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்,” என்று தெரிவித்தனர். முறையான மதமாற்றச் சடங்குகள் நடந்ததா என்பதையும் சரிபார்ப்புக் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.!

Source link