புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., ஆதரவு அளித்துள்ளது.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, சபையில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, காங்., – தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, ‘இண்டி’ கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
இதில், 118 எம்.பி.,க் கள் கையெழுத்திட்டு உள்ளனர். ஆனால், திரிணமுல் காங்., – எம்.பி.,க்கள் யாரும் கையெழுத்திடவில்லை. பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு, வரும் 9ல் துவங்குகிறது.
அன்றைய தினம், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. லோக்சபாவில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால், இத்தீர்மானம் தோல்வி அடைவது உறுதி.
இந்நிலையில், திரிணமுல் காங்., தலைவர்கள் கூறியதாவது: துவக்கத்தில் இருந்தே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம். இது, அவசர கதியில் செய்யப்படுவதை மட்டுமே நாங்கள் விரும்பவில்லை.
நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் போது, எங்கள் எம்.பி.,க்கள் அனைவரும் சபையில் இருப்பர். தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளிப்பர்.இது தொடர்பாக இண்டி கூட்டணி தலைவர்களுடன் அவ்வப்போது பேசி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
