நமது சிறப்பு நிருபர்
இந்தியா, எரிபொருள் இருப்பை மேலும் உறுதி செய்ய பல்வேறு மாற்று வழிகளை ஆராய்ந்து வரும் நிலையில், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் நம் நாட்டுக்கு கூடுதல் எரிபொருள் வழங்க முன்வந்துள்ளன.
இது குறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:மேற்காசியாவில் நிலவி வரும் போர் சூழலால், முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. எனினும், இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை.
காரணம், ஹார்முஸ் வழியாக மட்டும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவை வருவதில்லை. ரஷ்யா, மேற்கு ஆப்ரிக்கா, அமெரிக்கா மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலிருந்தும் தடையின்றி எரிசக்தி கிடைப்பதை இந்தியா உறுதி செய்துள்ளது.
இதனால், ஒரு வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், அது எரிபொருள் வினியோகத்தில் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தாது. இந்தியாவுக்கு, கிட்டத்தட்ட 40 சதவீத கச்சா எண்ணெய் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. எஞ்சிய 60 சதவீத எண்ணெய் மற்ற பாதுகாப்பான வழித்தடங்கள் வாயிலாக கொண்டு வரப்படுகிறது.
இதனால் போர் அல்லது பேரிடர் காலங்களிலும் இந்திய நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி எரிபொருள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளின் எண்ணிக்கை 27லிருந்து 40ஆக உயர்ந்துள்ளது.
தேச நலனை அடிப்படையாக கொண்டு, எங்கிருந்து மலிவாகவும் எளிதாகவும் எண்ணெய் கிடைக்கிறதோ, அங்கிருந்து கொள்முதல் செய்யும் கொள்கையை இந்தியா தொடர்ந்து பின்பற்றி வருகிறது.
இந்த 40 நாடுகள் தவிர, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் இந்தியாவுக்கு எரிவாயு வழங்க முன்வந்துள்ளன. இது மட்டுமின்றி, எரிபொருள் இருப்பை உறுதி செய்ய, இதுவரை எரிபொருட்களை வாங்கியிராத மேலும் பல நாடுகளிடம் இருந்தும், அவற்றை வாங்குவது குறித்து இந்தியா பேசி வருகிறது. இவ்வாறு அரசு வட்டாரங்கள் கூறின.
