கோவை : கோவையில், கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சம்பவம் நடந்த நான்கு மாதங்களில், குற்றவாளிகள் மூவருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த, 21 வயது மாணவி, கோவை, பீளமேடு தனியார் கல்லுாரியில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். தனியார் விடுதியில் தங்கி, கல்லுாரிக்கு சென்றபோது, ஆண் நண்பருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியது. ஐந்தாண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.
பேசிக்கொண்டிருந்தனர்
கடந்தாண்டு நவ., 2ம் தேதி இரவு 10:45 மணிக்கு, கோவை, பீளமேடு விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகரில், ஆண் நண்பரும், மாணவியும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டுஇருந்தனர்.
அந்த நேரத்தில், மூன்று நபர்கள் அந்த வழியாக மொபட்டில் சென்றனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கார் நிற்பதையும், அதற்குள் ஒரு பெண் இருப்பதையும் பார்த்து, அங்கு சென்றனர்.
அவர்கள், கார் கதவை திறக்குமாறு கூறினர். காரை திறக்க மறுத்ததால், கண்ணாடியை உடைத்து கத்தியை காட்டி மிரட்டினர். பின், இருவரையும் காரில் இருந்து வெளியே இழுத்தனர்.
மாணவியின் நண்பர் தடுத்தபோது, அவரை அரிவாள் முனையால் தலையில் ஓங்கி அடித்தனர். அதில், தலையில் ரத்தம் கொட்டியதால், அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இருவரிடமிருந்து மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்தனர்.
கல்லுாரி மாணவியை சம்பவ இடத்திலிருந்து சிறிது துாரத்துக்கு கடத்திச் சென்று, மூவரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து விட்டு, அங்கிருந்து தலைமறைவாகினர்.
இந்நிலையில், ஆண் நண்பர் மயக்கம் தெளிந்து எழுந்து சென்று, காரை எடுத்துக் கொண்டு அவிநாசி ரோட்டிற்கு வந்தார். ரோட்டில் சென்ற சிலரது உதவியுடன், தன் குடும்பத்தினருக்கு மொபைல் போனில் தகவல் அளித்தார்.
அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, பீளமேடு போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று, மாணவியை பல மணி நேரம் தேடினர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவி, சிறிது துாரம் நடந்து வந்து, அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டின் கதவை தட்டி கூச்சலிட்டார்.
அந்த வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்த போது, நடந்த சம்பவம் குறித்து கூறினார்.
அதிகாலையில் மீட்டனர்
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, பீளமேடு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார், மறுநாள் அதிகாலை மாணவியை மீட்டனர்.
விசாரணையில், மாணவியை பலாத்காரம் செய்த வர்கள், கோவை, துடியலுார் அருகே பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிய மூவரையும், துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அதில், மூவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த கொடூர செயலில் ஈடுபட்டது, சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே சிங்கம்புணரி, அய்யனார் கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி, 29, இவரது உடன்பிறந்த சகோதரர் காளீஸ்வரன், 21, இவர்களது உறவினரான மதுரை, கருப்பாயூரணி, பாண்டி கோவில் மந்தையைச் சேர்ந்த தவசி, 20, என்பது தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.
மூவர் மீதும், 2025 டிச., 1ல், கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. டிச., 19ல் கோவை மகளிர் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு, இறுதிகட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடந்து வந்தது.
விசாரணை முடிந்து, மார்ச் 7ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மூவரும், நேற்று பிற்பகல் 2:10 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நீதிபதி சுந்தரராஜ், ‘மூவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மூவரும் குற்றவாளிகள்’ என அறிவித்தார்.
அளிக்கப்படும் தண்டனை குறித்து மூவரிடம் கேட்ட போது, ‘எங்களுக்கு குறைந்த வயது என்பதால், குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும்’ என, நீதிபதியிடம் கூறினர்.
பின், தண்டனை விபரம் அறிவிப்பது ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 3:40 மணிக்கு நீதிபதி தண்டனை விபரத்தை வாசித்தார்.
அப்போது, குற்றவாளிகள் மூவருக்கும் சாகும் வரை ஆயுள் சிறை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, அரசு சார்பில், 7 லட்சம் ரூபாய், ஆண் நண்பருக்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிஷா ஆஜரானார்.
மகளிர் தினத்தில் மகிழ்ச்சியான தீர்ப்பு மாணவி பலாத்கார சம்பவத்தில், ஒரு மாதத்தில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விரைந்து முடிக்க, குற்றவியல் தொடர்பியல் துறை மற்றும் அரசு தரப்பில், போலீசாருக்கு எல்லா வகையிலும் உதவியாக வழிகாட்டப்பட்டது. குற்றவாளிகளுக்கு வாழ்நாள் ஆயுள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமைக்கு, மகளிர் தினத்தை முன்னிட்டு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. — ஜிஷா, அரசு தரப்பு சிறப்பு வக்கீல்
