கைதான போது வயது 15: 36 வயதில் விடுவித்தது கோர்ட்

கொல்கட்டா: நம் நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனை கைது செய்து, 21 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்திருந்த நிலையில், அவரை உடனே விடுவித்து நாடு கடத்தும்படி, கொல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மேற்கு வங்கத்திற்குள் நுழைந்த, 15 வயது சிறுவனை, 2005ல் போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது வயதை கண்டறியும், ‘ஆசிபிக்கேஷேன்’ என்ற பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

அந்த பரிசோதனையில், கைதான போது அந்நபரின் வயது 15 எனவும், தற்போது அவருக்கு 36 வயது எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதுதொடர்பான அறிக்கை, கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை ஆய்வு செய்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சம்பந்தப்பட்ட நபர் சிறுவனாக இருந்தபோது கைது செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ், ஒரு சிறார்க்கு விதிக்கக் கூடிய அதிகபட்ச தண்டனை ஏழு ஆண்டுகள் தான் .

மனுதாரர் மொத்தம் 21 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே, இந்த வழக்கில் இருந்து அவரை உடனே விடுவித்து, வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பும் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link