சென்னை: தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அத்தனை தொகுதிகள் தங்களுக்கும் வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பிடிவாதமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் 28; முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா இரண்டு தொகுதிகள் என ஒதுக்கி, உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது.
ஏற்க முடியாது
கூட்டணியில், 23 கட்சிகள் இடம்பெற்ற நிலையில், தே.மு.தி.க., – வி.சி., – ம.தி.மு.க., – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன், தி.மு.க, தொகுதி பங்கீட்டு குழு பேச்சு நடத்தி வருகிறது.
தங்களுக்கு பத்து தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தே.மு.தி.க.,வுக்கு, ராஜ்யசபா எம்.பி., கொடுக்கப்பட்டு விட்டதால், அக்கட்சிக்கு எட்டு தொகுதிகளை ஒதுக்குவதற்கு, தி.மு.க., முன்வந்துள்ளது.
இதையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், ‘கடந்த 2019ல் இருந்து கூட்டணியில் இருக்கும் எங்களுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கவில்லை.
எதிர்பார்ப்பு
‘எனவே, தே.மு.தி.க.,வை விட குறைவான தொகுதி கொடுப்பதை ஏற்க முடியாது’ என, தி.மு.க., குழுவிடம் திட்டவட்டமாக கூறியுள்ளன.
இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
பல்வேறு கூட்டணி வாய்ப்புகள் இருந்தும், கொள்கை அடிப்படையில், தி.மு.க., கூட்டணியில், எங்கள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்கிறார்.
அதற்கான மரியாதையை, தொகுதிகளை ஒதுக்குவதில் தி.மு.க., காட்ட வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் எதிர்பார்ப்பு.
கடும் நெருக்கடி
தி.மு.க.,வுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து, அதிக தொகுதிகளை காங்கிரஸ் வாங்கி விட்டது. சில வாரங்களுக்கு முன், கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.,வுக்கு, எட்டு அல்லது 10 தொகுதிகள் கொடுப்பதை, நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை எங்களுக்கும் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும், ‘தே.மு.தி.க.,வுக்கு இணையாக எங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும்’ என்பதில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘வி.சி., மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், கடந்த 2021 தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளே தரப்படும். முதல்வர் ஸ்டாலின் பேசினால், அவர்கள் சமாதானமாகி விடுவர்’ என்றார்.
