பெர்த்: ஆசிய கோப்பை கால்பந்தில் இன்று இந்தியா, ஜப்பான் பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் நடக்கிறது. 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன. இதில் ‘டாப்-6’ இடம் பெறும் 6 அணிகள் உலக கோப்பை தொடருக்கு (2027, பிரேசில்) நேரடியாக தகுதி பெறலாம்.
‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் போட்டியில் 1-2 என வியட்நாமிடம் தோற்றது. இன்று இரண்டாவது போட்டியில் வலிமையான ஜப்பானை சந்திக்கிறது.
உலகத் தரவரிசையில் 67 வது இடத்திலுள்ள இந்திய அணி, முதல் போட்டியில் வெற்றிக்காக கடைசி வரை போராடியது. அறிமுக போட்டியில் கோல் அடித்த சன்பிதா, கேப்டன் ஸ்வீட்டி தேவி, சஞ்சு, அஞ்சு, பியாரி, மணிஷா உள்ளிட்டோருக்கு இன்று கடும் சவால் காத்திருக்கிறது.
ஜப்பானை பொறுத்தவரையில், 2011ல் உலக கோப்பை வென்றது. 2014, 2018ல் ஆசிய சாம்பியன் ஆனது. உலகத் தரவரிசையில் ‘நம்பர்-8’ ஆக உள்ளது. முதல் போட்டியில் ஜப்பான் வீராங்கனைகள் 90 நிமிடத்தில், 87 முறை வியட்நாம் கோல் ஏரியாவை முற்றுகையிட்டனர்.
இவற்றை இந்தியா சமாளித்து, அதிக கோல் விட்டுக் கொடுக்காமல் போராட வேண்டும். இது, காலிறுதிக்கு முன்னேற உதவியாக இருக்கும். இதற்கு முன் மோதிய இரு போட்டியில் இந்தியா 0-7, 0-1 என தோற்றது. இருப்பினும் இளம் வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு சவால் கொடுப்பர் என நம்பலாம்.
ஈரான் வீராங்கனைகளுக்கு சிக்கல்
ஆசிய கோப்பை கால்பந்தில் பங்கேற்கிறது ஈரான். தென் கொரியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, ஈரான் வீராங்கனைகள் பாட மறுத்து, அமைதியாக நின்றிருந்தனர். அடுத்து ஆஸ்திரேலிய போட்டியின் போது, தேசிய கீதம் பாடி, ‘சல்யூட்’ செய்தனர்.
இதனிடையே ஈரான் ‘டிவி’யில் செய்தி வாசித்த முகமது ரேசா ஷாபாசி கூறுகையில்,”போர்க்காலத்தில் தேசத்திற்கு எதிராக செயல்படும் துரோகிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர். நமது பெண்கள் கால்பந்து அணி தேசிய கீதம் பாட மறுத்தது, அவமானம், துரோகத்தின் உச்சம்,” என்றார்.
