ஏற்றுமதியாளர்களுக்கு விதிகளில் தளர்வு: மத்திய அரசு முடிவு

புதுடில்லி: மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால், வர்த்தக பாதிப்பு ஏற்படாத வகையில், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

வெளிநாட்டு வர்த்தகத்துக்கான பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் மாற்றங்களின் விளைவாக, சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதைகள், சர்வதேச வினியோக அமைப்புகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, வரியின்றி இறக்குமதி செய்ய, குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட அளவு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற ஏற்றுமதி விதியில் தளர்வு அளிக்கப்படுகிறது.

அதன்படி, 2026 மார்ச் 1 முதல் மே 31 வரை காலாவதியாகும் ஏற்றுமதி காலக்கெடு, வரும் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்கு எவ்விதமான அபராதமும் விதிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் அதீத வரி விதிப்பால் ஏற்றுமதியாளர்கள் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், அமெரிக்கா — இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக போரிடுவது, கப்பல் மற்றும் விமான கட்டணங்கள், காப்பீட்டு பிரீமியம் ஆகியவற்றின் உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.

இது நீடித்தால், இந்திய பொருட்களின் விலையில் போட்டித்தன்மை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு சலுகையை அறிவித்துள்ளது.

சலுகை என்ன? ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ‘இ.பி.சி.ஜி.,’ எனும் ஏற்றுமதி மேம்பாட்டு மூலதன பொருட்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான இயந்திரங்களை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம். ஆனால், அதற்கு பதிலாக, குறிப்பிட்ட காலத்துக்குள், குறிப்பிட்ட அளவு பொருட்களை ஏற்றுமதி செய்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதனை ‘எக்ஸ்போர்ட் ஆப்ளிகேஷன்’ என்பர். குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த நிபந்தனையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் கால நீட்டிப்புக்கு அபராதம் செலுத்த நேரிடும். ஆனால், அத்தகைய கட்டணம் ஏதுமின்றி, தற்போது நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Source link