துாத்துக்குடி: “திராவிட மாடல் ஆட்சி, அனைத்து சமூகத்தினருக்கும் சமநிலையான வளர்ச்சியை வழங்கி வருகிறது,” என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
துாத்துக்குடியில், 136 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனையை, துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்து, 110 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில், அவர் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இலவச பேருந்து பயண திட்டம் வாயிலாக, கோடிக்கணக்கான எண்ணிக்கையிலான பயணங்களை பெண்கள் மேற்கொண்டு உள்ளனர்.
முதல்வர் வாக்குறுதி காலை உணவு திட்டத்தில், 22 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். சமீபத்தில் வெளியான யு.பி.எஸ்.சி., தேர்வில் தமிழக மாணவர்கள் முன்னிலை பெற்றிருப்பது, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது.
தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும், மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்.
வரும் 2030க்குள், மேலும் 7 லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 100 சதவீதம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
99 சதவீதம் பின், உதயநிதி அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை; இருந்தாலும், மக்களை தி.மு.க.,வில் இருக்கும் அனைவரும் விடாமல் சந்தித்து வருகிறோம்.
வாக்குறுதிகளில் 99 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம். அதையெல்லாம், தொடர்ந்து அவர்களுக்கு ஞாபகமூட்டி வருகிறோம்.
மக்களும் அதை உடனடியாக ஏற்றுக் கொண்டு, தி.மு.க.,வுக்கே ஓட்டளிப்பதாக உறுதி சொல்கின்றனர். அதையெல்லாம் கடந்து, பிரசாரத்திற்கென தனியாக போக வேண்டுமா என யோசித்து வருகிறோம்.
ஐந்து ஆண்டுகளில், சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து இருக்கிறோம்; தொடர்ந்தும் செய்வோம். அதற்காக, நாங்கள் அலட்சியமாக இருக்க மாட்டோம்.
தி.மு.க., தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும். அதில், அதிரடியான பல அறிவிப்புகள் இடம் பெறும். எல்லாருக்குமான தேர்தல் அறிக்கையாக அது இருக்கும்.
கடந்த தேர்தலில், சென்னை சேப்பாக்கம் — திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டேன். வரும் தேர்தலில் கட்சி தலைவர், எந்த தொகுதியை சொல்கிறாரோ, அதில் போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அங்கு தி.மு.க., வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
