சென்னை: ‘டாஸ்மாக்’ நிறுவனத்தின் மது கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர், சென்னை எழும்பூரில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, போராட் டக் குழுவினர் கூறியதாவது :
மது கடைகளில் பணியாளர்கள், 2003 முதல், 23 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது தான் எங்களின் கோரிக்கை.
இதுகுறித்து, அரசு உயரதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, அதன் அறிக்கையை பெற்று முடிவு எடுப்பதாக, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஆனால், அதை வெளியிடாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தேர்தல் துவங்க உள்ளதால், போராட்டத்தை முடித்துக் கொள்கிறோம். தேர்தல் முடிந்து, புதிய முதல்வர் பதவியேற்பு நாளில் கோரிக்கைகளை நிறைவேற்ற போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வருவாய் துறை சங்கம்
கிராம உதவியாளர்கள் தங்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, பிப்., 5 முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, போராடி வரும் கிராம உதவியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள, 10க்கும் மேற்பட்ட சங்கத்தினர், வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் தற்செயல் விடுப்பு எடுத்து, அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மகப்பேறு மருத்துவர்கள்
அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், எம்.ஆர்.பி., வாயிலாக, சிறப்பு மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அதற்கு முன்பாக, கடந்த வாரம், மருத்துவர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. ஆனால், மகப்பேறு துறையில், 57 மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருந்தும், கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
இதுகுறித்து, கோரிக்கை விடுத்தும், மருத்துவக் கல்லுாரி இயக்குநர், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், மகப்பேறு மருத்துவர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
மேலும், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தை பிரிவில், டி.எம்., படிப்பு படித்த, உயர் சிறப்பு மருத்துவர் பணியிடங்களை உருவாக்குவதற்காக, ஏற்கனவே இருக்கும் குழந்தைகள் நல மருத்துவர் பணியிடங்களை குறைப்பதாக, அரசு உத்தரவிட்டுள்ளது.
இது, அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, மகப்பேறு மருத்துவர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும். மேலும், குழந்தைகள் நல மருத்துவர் பணியிடங்களை குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
