காத்மாண்டு: நேபாளத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், ஆர்.எஸ்.பி., எனப்படும் தேசிய சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் சர்மா ஒலியை 50,000 ஓட்டுகள் வித்தி யாசத்தில் தோற்கடித்து உள்ளார்.
நம் அண்டை நாடான நேபாளம், அரசியல் குழப்பங்களுக்கு பெயர் பெற்றது. கடந்த, 2008ல் இருந்து, 13 பிரதமர்களை சந்தித்துள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து இடைக்கால அரசு அங்கு அமைந்தது.
இந்த சூழ்நிலையில் பார்லிமென்டுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள 275 தொகுதிகளில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது.
இதில், தேசிய சுதந்திர கட்சி, தனிப்பெரும்பான்மையை நெருங்கியுள்ளது. இதன் வாயிலாக நீண்ட காலத்துக்குப் பின், நேபாளத்தில் தனிப் பெரும்பான்மையுடன் கூடிய கட்சியின் ஆட்சி அமைய உள்ளது.
இந்நிலையில், ஜாப்பா – 5 தொகுதியில், பாலேந்திர ஷா அபார வெற்றி பெற்றார். நான்கு முறை பிரதமராக இருந்த, நேபாள கம்யூனிஸ்ட் – மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் கே.பி. சர்மா ஒலியை அவர் பெரிய வித்தியாசத்தில் வென்றார்.
பாலேந்திர ஷா, 68,348 ஓட்டுகள் பெற்றார். அதே நேரத்தில் சர்மா ஒலிக்கு, 18,734 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. இதன் வாயிலாக, 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாலேந்திர ஷா வென்றுஉள்ளார்.
