துறைமுக பொருளாதாரத்தின் நுழைவுவாயில்

இந்தியாவின் முக்கியமான உட்கட்டமைப்பு சொத்துகளாக துறைமுகங்கள் உள்ள நிலையில், ‘அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்னாமிக் ஜோன்’ ஒரு முன்னணி தனியார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

1990களின் இறுதியில் முந்த்ராவில் ஒரு சிறிய துறைமுகமாக தன் பயணத்தை துவங்கிய அதானி போர்ட்ஸ், இப்போது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்தியாவின் மொத்த சரக்கு கையாளுதலில் 27 சதவீத பங்கை தன்வசம் கொண்டுள்ள இந்நிறுவனம், உள்நாட்டில் 7 மாநிலங்களில் 15 துறைமுகங்களை இயக்குகிறது. இ த்துடன், இஸ்ரேல், இலங்கை, தான்சானியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு திறன் 633 எம்.எம்.டி.பி.ஏ., அளவுக்கு உள்ளது.

வருவாய் இயந்திரங்கள் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அதன் சரக்கு கையாளுதல் வளர்ச்சி குறிப்பிடப்படுகிறது. 2014 – 2025 வரை, இந்திய துறைமுக துறையின் வளர்ச்சி 4 சதவீதமாக இருந்த போதிலும், அதானி போர்ட்ஸ் 14 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. இதனால், 2014ல் கிட்டத்தட்ட 10 சதவீதமாக இருந்த சந்தை பங்கு, 2025ல் 27 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேநேரம், சரக்கு கையாளுதல் 14 சதவீதம் அதிகரித்து 12.9 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2025 – 26ம் நிதியாண்டில் 50.5 – 51.5 கோடி மெட்ரிக் டன் சரக்குகளை கையாளவும், 38,000 கோடி ரூபாய் வருவாயை பெறவும் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த வளர்ச்சிக்கு மூன்று முக்கிய காரணிகள் உள்ளன.

1. முந்த்ரா, தாம்ரா, கிருஷ்ணபட்டினம் போன்ற துறைமுகங்களின் விரிவாக்கம் மற்றும் விழிஞ்ஞம் துறைமுகத்தின் செயல்பாடுகள் வாயிலாக உள்நாட்டு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது

2. கொழும்பு, தான்சானியா, ஹைபா போன்ற சர்வதேச துறைமுகங்களில் விரிவாக்கம் மற்றும் கையகப்படுத்தல்கள்

3. கையாளப்படும் சரக்குகளின் வகைகளை விரிவுபடுத்தி வணிக அபாயத்தை குறைத்தல்.

குறிப்பாக, அதிக லாபத்தை தரும் கன்டெய்னர் பிரிவு, 2026ம் நிதியாண்டின் 3வது காலாண்டில் 20 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. கன்டெய்னர் சரக்கு கையாளுதல் என்பது வர்த்தகத்தை பிரதிபலிக்கும் ஒரு அளவுகோல். இதில், இந்தியாவின் சர்வதேச பங்கு வெறும் 2 சதவீதம் மட்டுமே என்பதால், எதிர்காலத்தில் இதில் மிகப்பெரிய கட்டமைப்பு ரீதியான வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது.

வருவாய் ஈட்டுதல் வளர்ச்சி மற்றும் விலையை தீர்மானிக்கும் அதிகாரம்: நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியும் வலிமையாக உள்ளது. 2019 – 2025 வரை நிறுவனத்தின் வருவாய் 19 சதவீத சி.ஏ.ஜி.ஆர்., அளவில் வளர்ந்துள்ளது. இதில், சரக்கு அளவு வளர்ச்சியுடன் சேர்ந்து, ஒரு டன் சரக்குக்கு கிடைக்கும் வருவாய் கூட அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் செயல்பாட்டு திறனும் முக்கிய பலமாக உள்ளது. தேசிய சராசரி 48 மணி நேரமாக இருக்கும் சரக்கு கப்பல்களின் செயல்பாட்டு நேரம், இங்கு கிட்டத்தட்ட 24 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக செயல் திறனும் செலவு குறைப்பும் கிடைக்கின்றன.

லாஜிஸ்டிக்ஸ்:

முன்பு மொத்த வருவாயில் 5 சதவீத பங்கை மட்டும் அளித்த லாஜிஸ்டிக்ஸ் பிரிவு, தற்போது மல்டி- மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள், உள்நாட்டு கன்டெய்னர் முனையங்கள், ரயில் சேவைகள் போன்றவற்றின் வாயிலாக விரிவடைந்து வருகிறது.

மேற்கு, பிரத்யேக சரக்கு வழித்தடமான டி.எப்.சி., உடன் முந்த்ரா துறைமுகம் நேரடி இணைப்பை பெற்றிருப்பது இந்த வளர்ச்சிக்கு மேலும் ஆதரவாக உள்ளது. 2026ம் நிதியாண்டில் இந்த பிரிவின் வருவாய் வளர்ச்சி, 100 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் வருவாய் 62 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

சர்வதேச விரிவாக்கம் மற்றும் கையகப்படுத்தல்கள்: சர்வதேச துறைமுகங்களும் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2026 நிதியாண்டின் 3வது காலாண்டில் சர்வதேச துறைமுகங்களின் வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 2026ம் ஆண்டு ஜன., மாதம் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட என்.கியூ.எக்ஸ்.டி., கையகப்படுத்தல் நிறுவனத்தின் புவியியல் பரவலையும் விரிவுபடுத்தியுள்ளது.

லாப வரம்பு காரணிகள்: லாப வரம்பிலும் இந்நிறுவனம் வலுவாக உள்ளது. ஒருங்கிணைந்த எபிடா லாப வரம்பு கிட்டத்தட்ட 60 சதவீதம் அளவில் தொடர்ந்து உள்ளது. இதில், கன்டெய்னர் சரக்குகள் 70 சதவீதம், திரவ சரக்குகள் 60 சதவீதம், உலர் சரக்குகள் 50 சதவீதம் வரை லாப வரம்பை வழங்குகின்றன.

கன்டெய்னர் சரக்குகளின் விகிதம் சற்று மாறினாலும், கன்டெய்னர் கையாளுதலில் அதானி போர்ட்ஸ் நிறுவனம் இன் னும் 45 சதவீதத்துக்கும் அதிகமான சந்தை பங்கை கொண்டுள்ளது. இது, பெரும்பாலும் உலர் சரக்குகளை மட்டுமே கையாளும் ஜே.எஸ்.டபிள்யூ., இன்ப்ராஸ்ட்ரக்சர் போன்ற போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, அதானி போர்ட்சுக்கு ஒரு கட்டமைப்பு ரீதியான லாப வாய்ப்பை வழங்குகிறது.

திறன் பயன்பாடு மற்றும் செயல்பாட்டு திறன்: ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கம் வேகமெடுக்கும்போது, கூடுதலாக கையாளப்படும் சரக்குகள் மிக அதிக லாப வரம்புடன் வருவாயை சேர்க்கின்றன. இதன் காரணமாக, வரும் 2028 வரையிலான நிதியாண்டுகளில், வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம் 22,400 கோடி ரூபாயிலிருந்து கிட்டத்தட்ட 29,800 கோடி ரூபாயாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் நிலையான செயல்பாட்டு திறனை உறுதிப்படுத்துகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் லாப வரம்பை அதிகரிக்கும் ஒரு காரணியாக இருக்கும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இது, கார்பன் உமிழ்வை குறைக்கும் இலக்குகளோடு ஒத்துப்போவதுடன், செயல்பாட்டு செலவுகளையும் குறைக்கிறது.

கடல்சார் சேவைகள்: ஒரு புதிய வணிக பிரிவான கடல்சார் சேவைகள், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2026ம் நிதியாண்டின் 3ம் காலாண்டில் 90 சதவீத வருவாய் வளர்ச்சியை அடைந்து உள்ளது.

கடன் குறைப்பு மற்றும் பணப்புழக்க வலிமை: நிறுவனத்தின் நிதிநிலையும் மேம்பட்டு வருகிறது. 2026 நிதியாண்டில் சுமார் 18,000 – 19,000 கோடி ரூபாய் செயல்பாட்டு பணப்புழக்கம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்கால விரிவாக்கத்துக்கு தேவையான 80,000 கோடி ரூபாய் முதலீட்டில் பெரும்பகுதி நிறுவனத்தின் உள்நாட்டு பணப்புழக்கத்திலிருந்தே நிதியளிக்கப்படும் என்று கணிக்கப்படுகிறது.

மொத்தத்தில், ‘அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்னாமிக் ஜோன்’ நிறுவனம் ஒரு தனிப்பட்ட துறைமுக இயக்குதலில் இருந்து, ஒருங்கிணைந்த கடல்சார் உட்கட்டமைப்பு சேவை நிறுவனமாக வளர்ந்து வருகிறது. நீண்டகால முதலீட்டாளர்களுக்கு உட்கட்டமைப்பு துறையில் இது முக்கியமான வாய்ப் பாக பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

Source link