வாஷிங்டன்: ‘ஈரானில் இதுவரை தாக்குதல் நடத்தாத பகுதிகளை துவம்சம் செய்வோம். ஈரானை முழுமையாக அழிப்போம்; மேலும் பல தலைகள் உருளும்’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக, மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் ஈரான் தாக்கி வருகிறது.
போர் எட்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்த நிலையில், மேற்காசிய நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான் மன்னிப்பு கேட்டுள்ளார். அங்கிருந்து தாக்குதல்கள் நடத்தாத நிலையில், மேற்காசியாவை தாக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதாவது:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரான் நிலைகுலைந்துள்ளது. அதனால்தான், மன்னிப்பு கேட்டதுடன், மேற்காசிய நாடுகளை தாக்க மாட்டோம் என்று ஈரான் கூறியுள்ளது.
ஆயிரம் ஆண்டு வரலாற்றில் ஈரான் முதல் முறையாக மேற்காசிய நாடுகளிடம் அடிப்பணிந்துள்ளது. ஆனாலும், எங்களுடைய நோக்கங்கள் இன்னும் முடியவில்லை. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, பெட்ரோல் விலை உயர்வுகள் ஏற்பட்டாலும், ஈரானை அழிப்பதுதான் எங்களுடைய இலக்கு.
அதனால், ஈரான் மீது எங்களுடைய தாக்குதல்கள் இன்னும் தீவிரமடையும். இதுவரை தாக்காத இடங்களையும் தாக்க உள்ளோம். ஈரானை முழுதுமாக அழிப்போம்.
ஏற்கனவே பல தலைவர்களை அந்த நாடு இழந்துள்ளது. எங்களுடைய அடுத்தக் க ட்ட நடவடிக்கைகளில், மேலும் பல தலைகள் உருளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
