வாஷிங்டன்: ‘கூகுள்’ நிறுவனத் தின், சி.இ.ஓ., எனப்படும் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,361 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘ஆல்பபெட்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை பூர்வீகமாக உடைய சுந்தர் பிச்சை உள்ளார்.
அவருடைய மொத்த வருமானம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,361 கோடி ரூபாயாக உயர உள்ளது.
இதன் வாயிலாக, உலகளவில் அதிக ஊதியம் பெறும் அதிகாரிகளில் ஒருவராக சுந்தர் பிச்சை மாற உள்ளார்.
இது தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘பைனான்சியல் டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி:
சுந்தர் பிச்சைக்கு கிடைக்கும் மொத்த தொகையில் பெரும் பகுதி அவருக்கு ரொக்க பணமாக கிடைக்காது. கூகுள் நிறுவனத்தின் 1,000 கோடி ரூபாய் பங்குகள் அவருக்கு வழங்கப்பட உள்ளன.
இவை தவிர, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு பங்குகள் அவருக்கு வழங்கப்படும். இதன் மதிப்பு 700 கோடி ரூபாய். இவை அனைத்திற்கும் மேலாக அவரது ஆண்டு சம்பளம் மட்டும், 16 கோடி ரூபாயாகும்.
டிரைவர் இல்லாமல் இயங்கும் கார் மற்றும் ட்ரோன் வாயிலாக பொருட்கள் டெலிவரி செய்வது போன்ற புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியைப் பொறுத்து, அவருக்கு கூடுதலாக 2,900 கோடி ரூபாய் பங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடந்த 2015ல் சுந்தர் பிச்சை பொறுப்பேற்கும் போது கூகுளின் மதிப்பு 44 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இன்று அது, 300 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்த அபார வளர்ச்சியை பாராட்டியே அவருக்கு இந்த மிகப் பெரிய சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள் ளது.
