புதுடில்லி: ”ஈரான் நாட்டின், ‘ஐரிஸ் லாவன்’ கப்பலை கொச்சி துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கியது மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட சரியான முடிவு,” என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் இரு போர் கப்பல்கள் நம் நாட்டின் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் நடந்த, ‘மிலன்’ கடற்படை பயிற்சியில் பங்கேற்றன.
அதில், ‘ஐரிஸ் டீனா’ என்ற போர் கப்பல், இலங்கையின் காலி துறைமுகம் வழியாக சென்ற போது, அமெரிக்க கடற்படையால் தகர்க்கப் பட்டது. இதில், 87 ஈரானிய வீரர்கள் உயிரிழந்தனர்.
மற்றொரு போர் கப்பலான, ‘ஐரிஸ் லாவன்’ ஈரான் திரும்பும் வழியில் ஆபத்தை எதிர்கொண்டதால், இந்திய கடல் பகுதிக்குள் நுழைய அனுமதி கோரியது. அதற்கு கடந்த 1ம் தேதி அனுமதி கிடைத்தது. கடந்த 4ம் தேதி கொச்சி துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டது.
இது குறித்து டில்லியில் நடந்த, ‘ரெய்சினா’ மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
போர் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஈரான் போர் கப்பல்கள் பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் சூழ்நிலை காரணமாக சிக்கலை சந்தித்தன.
அதில் இந்திய கடல் பகுதிக்கு அருகே பயணித்த கப்பல் ஒன்று நாட்டிற்குள் நுழைய அனுமதி கோரியது.
சட்ட ரீதியான சிக்கல்கள் இருந்தாலும், இந்த விவகாரத்தை மனிதாபிமான கோணத்தில் பார்த்தோம். அந்த அடிப்படையிலேயே ஈரான் போர் கப்பலை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு சரியானதே.
இவ்வாறு அவர் கூறினார்.
