டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி; இன்று இந்தியா – நியூசிலாந்து மோதல்

ஆமதாபாத்: ‘டி-20’ உலக கோப்பை தொடர் ‘கிளைமேக்சை’ எட்டியுள்ளது. இன்று நடக்கும் பைனலில் இந்தியா வெல்லும் பட்சத்தில், தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைக்கலாம்.

இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று குஜராத்தின் ஆமதாபாத்தில் நடக்கும் பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

வலுவான ‘பேட்டிங்’: சர்வதேச ‘டி-20’ அரங்கின் ‘நம்பர்-1’ அணியான இந்தியா, அசுர பலத்தில் உள்ளது. நமது ‘பேட்டர்கள்’ அஞ்சாமல் விளாசுவது பலம். துவக்கத்தில் சாம்சன் மிரட்டுகிறார். கடந்த இரு போட்டியில் (97, 89 ரன்) அசத்திய இவர், இன்றும் கைகொடுக்கலாம். ‘நம்பர்-1’ பேட்டரான அபிஷேக் சர்மா தடுமாறுவது பலவீனம். இவரை நீக்க வாய்ப்பு இல்லை.

‘மிடில் ஆர்டரில்’ கேப்டன் சூர்யகுமார் (8 போட்டி, 242 ரன்) ‘சூறாவளியாக’ சுழன்று ஆட வேண்டும். திலக் வர்மா (199 ரன்) எந்த இடத்திலும் களமிறங்கி அதிரடியாக ரன் சேர்க்கிறார். கடைசி கட்ட வாணவேடிக்கைக்கு ‘ஆல்-ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா (199 ரன்), ஷிவம் துபே (209 ரன்) இருப்பதால், கோப்பை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.

மிரட்டும் பும்ரா: வேகப்பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் மிரட்டுகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அசத்திய பும்ரா, மீண்டும் முத்திரை பதிக்கலாம். ‘சுழலில்’ வருண் சக்ரவர்த்தி ரன்னை வாரி வழங்குகிறார். இவருக்கு பதில் குல்தீப் யாதவ்/சிராஜ்/வாஷிங்டன் சுந்தரை சேர்க்க வாய்ப்பு உள்ளது. ‘ஆல்-ரவுண்டர்’ அக்சர் படேல் அணிக்கு பெரும் பலம்.

அச்சுறுத்தும் ஆலன்: ‘டி-20’ ரேங்கிங்கில் 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியில் ‘ஆல்-ரவுண்டர்கள்’ அதிகம் இருப்பது சாதகம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் ஆலன், 33 பந்தில் 100 ரன் விளாசினார். மறுபக்கம் டிம் செய்பர்ட்டும் துவக்கத்தில் அதிவேகமாக ரன் சேர்க்கிறார்.

இவர்களை இந்திய பவுலர்கள் விரைவில் வெளியேற்ற வேண்டும் ரச்சின் ரவிந்திரா, கிளன் பிலிப்ஸ், சாப்மென், டேரில் மிட்சல், சான்ட்னர் என தரமான பேட்டர்கள் உள்ளனர். ‘வேகத்தில்’ பெர்குசன், மாட் ஹென்றி, ‘ஆல்-ரவுண்டர்’ ஜிம்மி நீஷம் கைகொடுக்கலாம்.’சுழலில்’ தொல்லை கொடுக்க கேப்டன் சான்ட்னர், ரச்சின், கோல் மெக்கோன்ச்சி உள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: துபாயில் 2025, மார்ச் 9ல் நடந்த ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி பைனலில் (50 ஓவர்) ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி, கோப்பை வென்றது. இதே போல இம்முறை சூர்யகுமார் சாதிக்க வேண்டும் என்பதே 140 கோடி இந்திய ரசிகர்களின் கனவாக உள்ளது.

இதயங்களை தகர்ப்போம்: சான்ட்னர்

நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் கூறுகையில் ”இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் பும்ரா சிறப்பாக பந்துவீசினார். இவரை சமாளிப்பது பற்றி விவாதித்தோம். ஆடுகளம் ஒத்துழைத்தால், வருண் சக்ரவர்த்தியும் சவால் கொடுப்பார். ஆமதாபாத்தில் எளிதாக ரன் குவிக்கலாம். இந்தியாவை 220 ரன்னில் கட்டுப்படுத்த வேண்டும். கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் இதயங்களை தகர்த்து, கோப்பை வெல்ல முயற்சிப்போம். ஆமதாபாத்தில் இந்திய ரசிகர்களை அமைதியாக இருக்க செய்வதே இலக்கு,” என்றார்.

ஸ்டைன் சவால்

நியூசிலாந்து அணி 2015 (50 ஓவர், எதிர், ஆஸி.,), 2019 (50 ஓவர், எதிர், இங்கி.,), 2021(‘டி-20’ உலக கோப்பை, எதிர், ஆஸி.,) என மூன்று உலக கோப்பை பைனலில் தோற்றது. 2000ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி பைனலில் (50 ஓவர்) இந்தியாவை வீழ்த்தியது. ‘டி-20’ உலக கோப்பை அரங்கில் 3 போட்டிகளிலும் (2007, 2016, 2021) இந்தியாவை வென்றது.

இது பற்றி தென் ஆப்ரிக்க முன்னாள் ‘வேகப்புயல்’ ஸ்டைன் கூறுகையில்,”ஐ.சி.சி., ‘நாக்-அவுட்’ போட்டிகளில் சொதப்புவதால் தென் ஆப்ரிக்காவை ‘சோக்கர்ஸ்’ என விமர்சிப்பர். நியூசிலாந்தும் உலக கோப்பை (50 ஓவர், டி-20) வென்றதில்லை. இம்முறை வெல்ல தவறினால், ‘சோக்கர்ஸ்’ பட்டத்தை நியூசிலாந்துக்கு வழங்குவேன்,”என்றார்.

பைனலுக்கு ‘ரெடி’: சூர்யகுமார்

இந்திய கேப்டன் சூர்யகுமார் கூறுகையில், ”இந்திய ரசிகர்களை அமைதியாக இருக்க செய்வோம் என்ற கருத்தை தான் அனைவரும் சொல்கின்றனர். ஏதாவது புதிதாக யோசிக்கலாமே. வருண் சக்ரவர்த்தியை பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர் தான் ‘டி-20’ அரங்கின் ‘நம்பர்-1’ பவுலர். அணியில் சாம்சனை சேர்த்தது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ‘டாப்-ஆர்டரில்’ சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான் அசத்துகின்றனர். சக வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளேன். கடினமான சூழலில் துணிச்சலாக செயல்பட வேண்டும். பைனலுக்கு சிறப்பாக தயாராகி உள்ளோம்,” என்றார்.

இதுவரை

சர்வதேச ‘டி-20’ அரங்கில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் 30 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 18, நியூசிலாந்து 11ல் வென்றன. ஒரு போட்டி ‘டை’ ஆனது.

* ‘டி-20’ உலக கோப்பை அரங்கில் இவ்விரு அணிகள் மூன்று முறை (2007ல் ‘சூப்பர்-8’, 2016ல் ‘சூப்பர்-10’, 2021ல் ‘சூப்பர்-12’) மோதின. அனைத்திலும் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

* ‘டி-20’ உலக கோப்பை பைனலில் இவ்விரு அணிகள் முதன்முறையாக மோதுகின்றன.

மோடி மைதானத்தில்…

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஒரு முறை (2023) மோதின. இதில் இந்தியா வென்றது.

பைனலுக்கு வந்த பாதை

இந்தியா

லீக் சுற்று

* அமெரிக்காவை வீழ்த்தியது (29 ரன்)

* நமீபியாவை வென்றது (93 ரன்)

* பாகிஸ்தானை தோற்கடித்தது (61 ரன்)

* நெதர்லாந்தை வீழ்த்தியது (17 ரன்)

‘சூப்பர்-8’

* தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது (76 ரன்)

* ஜிம்பாப்வேயை வென்றது (72 ரன்)

* வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது (5 விக்.,)

அரையிறுதி

* இங்கிலாந்தை வென்றது (7 ரன்)

நியூசிலாந்து

லீக் சுற்று

* ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது (5 விக்.,)

* எமிரேட்சை வென்றது (10 விக்.,)

* தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது (7 விக்.,)

* கனடாவை தோற்கடித்தது (8 விக்.,)

சூப்பர்-8′

* மழையால் ரத்து (எதிர்: பாக்.,)

* இலங்கையை வீழ்த்தியது (61 ரன்)

* இங்கிலாந்திடம் தோல்வி (4 விக்.,)

அரையிறுதி

* தென் ஆப்ரிக்காவை வென்றது (9 விக்.,)

மழை வருமா

ஆமதாபாத்தில் இன்று மழைக்கு வாய்ப்பில்லை.

காத்திருக்கும் சாதனை

பைனலில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், சொந்த மண்ணில் ‘டி-20’ உலக கோப்பை வென்ற முதல் அணி என்ற சாதனை படைக்கலாம். தவிர, தொடர்ச்சியாக 2 முறை ‘டி-20’ உலக கோப்பை வென்ற முதல் அணியாகலாம்.

* மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் அணி என்ற வரலாறும் படைக்கலாம். இதுவரை இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றுள்ளன.

சாம்சனுக்கு கிடைக்குமா

ஐ.சி.சி., சார்பில், இம்முறை சிறந்த வீரருக்கான தொடர் நாயகன் விருதுக்கு 8 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இப்பட்டியலில் சஞ்சு சாம்சன் (இந்தியா), ரச்சின் ரவிந்திரா (நியூசி.,), டிம் செய்பர்ட் (நியூசி.,), வில் ஜாக்ஸ் (இங்கிலாந்து), நிகிடி (தெ.ஆப்.,), மார்க்ரம் (தெ.ஆப்.,), சாகிப்ஜதா பர்ஹான் (பாக்.,), ஷாட்லி வான் ஷால்க்விக் (அமெரிக்கா) இடம் பெற்றுள்ளனர்.
சிறந்த வீரராக சாம்சன் தேர்வாகும் பட்சத்தில், ‘டி-20’ உலக கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருது வென்ற 3வது இந்திய வீரராகலாம். ஏற்கனவே கோலி (2014, 2016), பும்ரா (2024) இவ்விருது வென்றுள்ளனர்.

எட்டாவது முறை

நியூசிலாந்து அணி 8வது முறையாக ஐ.சி.சி., தொடரின் பைனலுக்கு முன்னேறியது. இரு முறை மட்டும் (சாம்பியன்ஸ் டிராபி–2000, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-2021) கோப்பை வென்றது. ஐந்து முறை (சாம்பியன்ஸ் டிராபி-2009, 2025, உலக கோப்பை-2015, 2019, ‘டி-20’ உலக கோப்பை-2021) பைனலில் தோற்றது. இன்றைய பைனலில் அசத்தினால் நியூசிலாந்து அணிக்கு முதல் உலக கோப்பை கிடைக்கும்.

15வது முறை

இந்திய அணி 15வது முறையாக ஐ.சி.சி., தொடரின் பைனலுக்கு முன்னேறியது. இதில் 7 முறை (உலக கோப்பை-1982, 2011, ‘டி-20’ உலக கோப்பை-2007, 2024, சாம்பியன்ஸ் டிராபி-2002, 2013, 2025) கோப்பை வென்றது. ஏழு முறை (உலக கோப்பை-2003, 2023, ‘டி-20’ உலக கோப்பை-2014, சாம்பியன்ஸ் டிராபி-2000, 2017, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-2021, 2023) தோல்வியடைந்தது. இன்று அசத்தினால் 8வது கோப்பை வெல்லலாம்.

பரிசு

‘டி-20’ உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 27.48 கோடி பரிசு கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணி ரூ. 14.65 கோடி பெறும்.

Source link