டோக்கியோ: ஜப்பானில் கடும் பனிப்பொழிவில் சிக்கி இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர்.
ஜப்பானில் வரலாறு காணாத அளவு கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.குறிப்பாக அந்நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அமோரி, நிகாட்டா, அகிதா மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன.
அமோரி மாகாணத்தில் சில பகுதிகளில் கிட்டத்தட்ட 4.5 மீட்டர் உயரம்(14 அடி) வரை பனி குவிந்து காணப்படுகிறது. இது 40 ஆண்டுகளில் இல்லாத ஒரு சூழல் ஆகும்.
ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு பனிப் பொழிந்து வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் 30 பேர் பலியாகி உள்ளனர். அங்கு குடியிருப்புகள், அலுவலக கட்டடங்கள் என எங்கு பார்த்தாலும் பனி சூழ்ந்து காணப்படுகிறது.
சீதோஷ்ண நிலை மோசமாக காணப்படும் அதே சூழலில் அங்கு மின்வெட்டும் நிலவுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வாகனங்களை இயக்க முடியாத நிலையில் பலரும் வெளியிடங்களுக்கு நடந்தே செல்கின்றனர்.
மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் போவதால் சிரமத்தையும் சந்தித்து வருகின்றனர். பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன. பொது போக்குவரத்தும் முற்றிலும் தடைபட்டுள்ளது.
கட்டடங்களின் மேற்கூரைகளில் படிந்திருக்கும் பனியை அகற்றும் பணியின் போதும், பனியில் புதைந்தும் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக உயிரிழப்பானது அமோரி மாகாணத்தில் பதிவாகி இருக்கிறது.
